பாட்டு மட்டும் இல்ல.. மாடலிங்கிலும் அசத்தும் ஸ்ரேயா கோஷல்.. வைரல் புகைப்படங்கள்!

 

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேற்கு வங்க மாநிலம் முர்ஷ்திபாத் நகரில் பிறந்த ஸ்ரேயா கோஷல், தனது இளம வயதில் ராஜஸ்தானில் குடிபெயர்ந்துள்ளார். 4 வயதிலே இசை மீது ஆர்வம் கொண்ட இவர், தனது 6-ம் வயதில் முறைப்படி கிளாசிக்கல் இசை கற்க தொடங்கியுள்ளார். இந்திய அணுசக்தி கழகத்தில் இவரது தந்தை பணியாற்றி வந்துள்ளார். 1997-ம் ஆண்டு பாபா அணு ஆராய்ச்சி மையத்திற்கு மாற்றப்பட்டபோது, குடும்பத்துடன் மும்பைக்கு குடிபெயர்ந்தார். 

அங்கு அறிவியல் படிப்பதற்காக அட்டாமிக் எனர்ஜி ஜூனியர் கல்லூரியில் சேர்ந்த ஸ்ரேயா, இசை கனவை நனவாக்க அந்த படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கலை கல்லூரியில் இணைந்தார். தனது 16-ம் வயதில் ‘சரிகமப’ என்கிற ரியாலிட்டி இசை ஷோவில் பங்கேற்று டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார்.

நிகழ்ச்சியில் இவரது பாடலை கேட்ட பாலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குநரான சஞ்சய் லீபா பஞ்சாலி, இவரிடம் தனித்திறமை இருப்பதை அறிந்து அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். 2002-ம் ஆண்டு சஞ்சய் லீலா பாஞ்சாலி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான தேவதாஸ் படம் தான் ஸ்ரோயா கோஷல் இந்தியில் பாடகியா அறிமுகமான முதல் திரைப்படமாகும்.

தேவதாஸ் படத்தில் 4 பாடல்களை பாடியிருந்த ஸ்ரோயா கோஷல், அடுத்தடுத்து இந்தியில் வெளியான பல படங்களில் பாடல் பாடும் வாய்ப்பினை பெற்றிருந்தார். தொடர்ந்து மற்ற மொழி படங்களிலும் பாடல்கள் பாட தொடங்கிய ஸ்ரோயா கோஷல், கடந்த 2002-ம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ஆல்பம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இந்த படத்தில் இவர் பாடிய “செல்லமே செல்லம் என்றாயடி” என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றார். இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா என தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்கள் பலரின் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார்.

தெலுங்கு, கன்னடம், இந்தி, பேஜ்பூரி, பஞ்சாபி, பெங்காலி என பல மொழிகளில் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள ஸ்ரேயா கோஷல் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஸ்ரேயா கோஷல் பிறந்த நாளை முன்னிட்டு அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.