இஸ்லாமிய கலாச்சாரத்துக்கு எதிரா இருக்கு.. ஐஸ்வர்யா ராஜேஷ் படத்துக்கு தடை.. இந்திய தேசிய லீக் புகார்!!

 

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ஃபர்ஹானா திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

2011-ம் ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ‘அட்டகத்தி’ படம் மூலம் தமிழ் சினிமாவின் கவனத்தை பெற்ற இவர், தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ் போன்ற படங்களில் நடித்து முன்னனி நடிகையானார்.

காக்கா முட்டை படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ், மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட ‘கனா’ படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.

தற்போது நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் படம் ‘ஃபர்ஹானா’. இந்தப் படத்தில் தன்னுடைய, குழந்தைகளுக்காக மத கட்டுப்பாடுகளை கடந்து வேலைக்குச் செல்லும் ஒரு பெண்ணின் வாழ்க்கை பின்னணியை படமாக்கியுள்ளனர்.  இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

அதில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.  இந்த நிலையில் இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளர் தடா அப்துல் ரஹீம் புகார் ஒன்றை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் ஃபர்ஹானா திரைப்படத்தின் டீசர் காட்சியில் ஒரு இஸ்லாமிய பெண் புர்கா அணிந்து உலகம் முழுவதும் சுற்றி வியாபாரம் செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இஸ்லாமிய பண்பாட்டு, கலாச்சாரத்திற்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள ஃபர்ஹானா திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

அதேபோல் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியான புர்கா திரைப்படத்தையும் இணையதளத்திலிருந்து நீக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் புர்கா திரைப்படத்தின் இயக்குநர் சர்ஜுனை கைது செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.