KPY பாலாவுக்கு கல்யாணமா..? எந்த நேரத்தில் நடக்கும் என அவரே கொடுத்த அப்டேட்!

 

தனது திருமணம் குறித்த அப்டேட்டை சின்னத்திரை நடிகர் KPY பாலா தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் நடந்த ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சின் மூலம் பிரபலமானவர் பாலா. இவர் 6வது சீசனில் கலந்து கொண்டு டைட்டில் பட்டத்தையும் பெற்று இருக்கிறார். பல காமெடி ஷோக்களில் கலந்து கொண்ட பாலாவுக்கு, குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரிய பிரேக் கொடுத்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதையும் கவர்ந்தார் பாலா. இதனைத் தொடர்ந்து, தும்பா, காக்டைல், ஜூங்கா, புலிப்பாண்டி உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். தற்போது சில ஷோக்களை ஆங்கரிங் செய்து வருகிறார்.

இவரை காமெடி செய்யும் நபராகவே பலருக்கு தெரியும். ஆனால் இவர் தான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு அறக்கட்டளையை வைத்து அதில் நிறைய பேருக்கு உதவி வருகிறார். முன்னதாக பழங்குடியின மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தார். மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னையில் உள்ள பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரால் வீட்டில் தவித்து வந்த மக்களுக்கு 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1,000 வழங்கினார். இவரது செயல், பலருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

கடலூர் அருகே உள்ள கடற்கரை ஓர கிராமமான தாழங்குடாவில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு 5,000 சதுர அடி இடம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் KPY பாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அந்த இடத்தை வழங்கியதுடன் அந்த பகுதி சிறுவர் - சிறுமிகளுக்கு பள்ளி நோட்டு புத்தகங்கள் மற்றும் பள்ளி புத்தகப்பையை வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதற்கு முன்பு சம்பாதிப்பதை இல்லாதவர்களுக்கு செய்து வந்த நிலையில் தற்போது உதவி செய்வதற்காகவே சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளதாகவும், என்னால் முடிந்தவரை செய்து கொண்டே இருப்பேன் என அவர் தெரிவித்தார்.

எதிர்காலத் திட்டம் முழுவதுமே தன்னால் இயன்றவரை அடுத்தவர்களுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக தெரிவித்த அவர் உங்களுக்கு திருமணம் எப்போது என்ற கேள்விக்கு திடீரென இப்படி ஒரு கேள்வியை கேட்டு விட்டீர்களே காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் என்னுடைய திருமணம் ஆனால் எப்பொழுது என்று தேதியை பின்பு அறிவிப்பேன் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை அஸ்மிதா, மஸ்காரா பாடலுக்கு நடனமாடினார்.