இன்னும் சில தினங்களில்.. ஓ போடு.. நடிகர் விக்ரமின் வைரல் பதிவு
22 ஆண்டுகளுக்கு முன் விக்ரம் நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்று ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.
1990-ல் வெளியான ‘என் காதல் கண்மணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் விக்ரம். தொடர்ந்து, மீரா, புதிய மன்னர்கள், உல்லாசம், சேது, தில், காசி, ஜெமினி, தூள், சாமி, பிதாமகன், அந்நியன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக ‘சியான் 62’ என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை ’சித்தா’ இயக்குனர் அருண்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்தில் விக்ரமுடன், எஸ்ஜே சூர்யா, துஷாரா விஜயன் நடிக்க உள்ளனர் என்பதும் ஜிவி பிரகாஷ் இசையில் ஷிபுதமின்ஸ் தயாரிப்பில் இந்த படம் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விக்ரம் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த பதிவில் அவர் ‘ஓ போட’ மறந்துவிடாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளதை அடுத்து இந்த படம் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படமான ‘ஜெமினி’ படத்தின் இரண்டாம் பாகங்களாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.