வட இந்திய ஊடகங்களுக்கு இளையராஜாவின் சிம்பொனி தெரியல்லியே! பாடகி சுவேதா மோகன் வேதனை!!

 

இசைஞானி இளையராஜா லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திவிட்டு சென்னை திரும்பினார். அவருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விமான நிலையத்திலேயே வரவேற்பு அளித்தார். பாஜகவின் மாநிலத் துணைத்தலைவர் கரு நாகராஜனும் விமான நிலையத்தில் இளையராஜாவுக்கு வரவேற்பு அளித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது வீட்டில் நேரில் சந்தித்து நன்றியும் தெரிவித்துள்ளார் இளையராஜா. அரசு சார்பில் இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப்பயணத்தைக் கொண்டாடும் விழா நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

ஆனால் இந்த நிகழ்வுகள் பற்றிய எந்த ஒரு செய்தியையும் வட இந்திய ஊடகங்களில் காண முடியவில்லை. இது குறித்து திரைத்துறையினரோ அல்லது இளையராஜா சார்ந்திருக்கும் பாஜகவினரோ குரல் எழுப்பவில்லை.

பிரபல பின்னணி பாடகி சுவேதா மோகன் இது குறித்து வருத்தத்துடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“தேசிய ஊடகங்களில் இளையராஜா சாரின் சிம்பொனி இசை நிகழ்ச்சி குறித்து எந்த ஒரு செய்தியும் ஏன் வரவில்லை என்று யாராவது சொல்வீர்களா? என்று கேள்வி கேட்டு என்டிடிவி, சிஎன்என் நியூஸ்18 தொலைக்காட்சிகளை டேக் செய்து கேள்வி எழுப்பியுள்ளார் சுவேதா மோகன்.