இவரு போன் போட்டா பிரதமரே பேசுவாரே.. ஒரு போன் போட்டால் பிரச்சனை முடிஞ்சிடும் தானே? செய்வாரா?
உலகம் முழுவதும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கூலி திரைப்பட வெளியீடு குறித்து அவருடைய ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் காத்திருக்கிறார்கள். அமெரிக்க்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு தொடங்கி விட்டது.
கூலி பட ஆடியோ வெளியீட்டு வீடியோவும் சன் டிவியில் முழுமையாக ஒளிபரப்பப்பட்டு யூடியூபிலும் வைரலாகி வருகிறது. இந்த விழாவில் கலாநிதி மாறன் பேசும் போது ரஜினி போன் போட்டால் பிரதமர் கூட உடனடியாக எடுத்துப் பேசுவார் என்று கூறியிருந்தார். பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமான நபராகத் தான் ரஜினி இருந்து வருகிறார் என்பதும் ஊரறிந்த உண்மை.
ரஜினிகாந்த் கூலி பட வெளியீட்டில் பிஸியாக இருக்கும் நிலையில், அவருடைய சக நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து, வாக்காளர் பட்டியலைதேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அனைத்து இந்திய மக்களும் ஒன்றுபட்டு இதை வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள் கூட தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான நடவடிக்கைகளையும் ராகுல் காந்தி அம்பலப்படுத்திய தில்லுமுல்லுகளையும் கண்டித்து வருகிறார்கள். பிரதமர் மோடி வழக்கம் போல் மௌனம் சாதித்து வருகிறார். பாஜகவினர் தேர்தல் ஆணையத்திற்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர்.2019ம் ஆண்டு தேர்தல் முடிவு வெளியான போது பிரதமர் மோடியை, நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாய்பாய் வரிசையில் வைத்து பாராட்டியவர் ரஜினிகாந்த்.
கர்நாடகாவில் ஒரே தொகுதியில் தேர்தல் ஆணையம் கொடுத்த தகவல்களிலேயே ஒரு லட்சம் வாக்குகள் முறைகேடு நடைபெற்றுள்ளதை ராகுல் காந்தி ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளார். விளக்கம் அளிக்க வேண்டிய தேர்தல் ஆணையம் ராகுலிடம் மல்லுக்கட்டுகிறது.
இந்தியக் குடிமகனாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாய் திறந்து பேசுவாரா? தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும், வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைப்பாரா? கூலி படம் வெளியான பிறகாவது இது குறித்து ஏதாவது சொல்வாரா?
- பாண்டியன்