எனக்கு நிறைய கெட்ட பழக்கங்கள்... முதல் முறையாக மனம் திறந்த ரோபா சங்கர்!!

 

நடிகர் ரோபோ சங்கர் தான் உடல் எடை குறைந்தது குறித்து முதல் முறையாக மனம் திறந்து கூறியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிப்பரபான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மேடை சிரிப்புரை மூலமாக அறியப்பட்டவர் ரோபா சங்கர். இவர், விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். 2007-ல் வெளியான ‘தீபாவளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிகமான இவர், ரௌத்திரம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, மாரி, புலி, மன்னர் வகையறா, கலகலப்பு 2, விஸ்வாசம், ஹீரோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று இவர் எடை குறைந்து இருந்தார். ரோபா சங்கர் உடல் எடை குறைந்ததை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி ஆகி இருந்தனர். ஒரு சிலர் அவரைப் பற்றி தவறாகவும் கருத்து தெரிவித்து வந்தனர். ரோபோ சங்கருக்கு அளவுக்கு அதிகமாக குடித்ததால் உடல் எடை குறைந்துவிட்டது, அதனால் உடல்நிலை ரொம்பவே பாதித்துவிட்டது. இனி ரொம்ப நாள் தாக்கு பிடிக்க மாட்டார். நடிகர் விஜயகாந்த் மாதிரி ரோபோ சங்கர் உடம்பும் போயிடுச்சு அவ்வளவுதான் என்றெல்லாம் கூறி வந்தார்கள்.

இந்த நிலையில்தான் சில மாதங்களிலே தன்னுடைய பழைய நிலைக்கு இயல்பாக ரோபோ சங்கர் மாறிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அது குறித்து சமீபத்தில் மனம் திறந்து பேட்டியில் பேசியிருக்கிறார். அவர் அந்த பேட்டியில் கூட எப்போதும் போல தன்னுடைய கலகலப்பான காமெடியாலே பதிலளித்திருக்கிறார்.

ரோபோ சங்கர் பேசுகையில், எல்லாரும் சொல்ற மாதிரி இல்லங்க. அந்த நேரத்துல பட வாய்ப்புக்காக தான் உடல் எடை குறைப்பதற்காக டயட்டிலிருந்தேன். அதே நேரத்தில் மஞ்சள்காமலையும் வந்திருக்கு, ரெண்டும் சேர்ந்ததால உடல் எடை வேகமாக குறைச்சிட்டு. பிறகு டாக்டர்களும் என்னுடைய குடும்பத்தினரும் போராடி என்னை பழைய நிலைக்கு கொண்டு வந்து இருக்காங்க.

என்ன பற்றி எவ்வளவோ நெகட்டிவ் கமெண்ட்கள் வந்துச்சு. சில யூடியூப் சேனல்கள் கூட இன்னும் ஒரு சில நிமிடங்களில் ரோபோ சங்கர் உடல் வீட்டிற்கு வந்து விடும் என்றும், எனக்கு RIP எல்லாம் போட்டாங்க. நான் அப்போ வீட்டில் நல்லபடியா தான் இருந்தேன். இதற்கு என்ன சொல்வது எனக்கு தெரியல என்று கலகலப்பாக சிரித்தபடியே பேசி கொண்டிருந்தார். 

என்னை மாதிரி வேற யாருக்கும் உடம்பு சரியில்லாமல் போறது இப்போ சகஜம்தான். ஆனா இந்த மாதிரி நிலைமையில் இருக்கிறவங்களை மேலும் மேலும் துன்புறுத்துற மாதிரி கமெண்ட் போடாதீங்க. நம்மளால கமெண்ட் போட முடியும் என்கிறதுக்காக கண்டபடி எல்லாம் அடுத்தவங்கள பற்றி பேசக்கூடாது என்று கூறியபடியே மேலும் அவர் தொடர்ந்து இருக்கிறார்.

அதில், எனக்கும் ஒரு காலத்துல சில கெட்ட பழக்கங்கள் இருந்துச்சு. அந்த கெட்ட பழக்கங்களாலும் என்னுடைய உடம்பு போயிடுச்சுன்னு எல்லாரும் சொன்னாங்க. அதுவும் ஒரு காரணமா இருக்கலாம். அதனாலதான் நான் சொல்றேன் தயவு செய்து யாரும் அந்த மாதிரி கெட்ட பழக்கங்களுக்கு அடிமை ஆகிறது. நம்முடைய உடம்பு தான் நமக்கு சுவர். அது இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.

என்னடா இவன் அட்வைஸ் பண்றான்னு நினைக்காதீங்க. நான் அந்த இடத்துல இருந்ததனால தான் சொல்றேன். தப்பு பண்றது பிரச்சனை கிடையாது. ஆனால் நம்ம பண்ற தப்பால நமக்கு ஒரு பிரச்சனை வரும்போது நம்மை நேசிக்கிறவங்கள கஷ்டப்படுறாங்க. இதை இப்போ நான் கண்கூட பார்த்தபோதுதான் தெரிஞ்சது. அதனால தயவு செய்து உங்ககிட்ட கெஞ்சி கேட்டுகிறேன் என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.

ஆரம்பத்தில் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்த ரோபோ சங்கர் இறுதியில் அனைவரிடமும் குடி போன்ற தப்பான விஷயங்களில் தங்களுடைய வாழ்க்கைகளை தொலைச்சி விடாதீங்க என்று வேண்டுகோள் வைக்கும் போது அவர் உருக்கமான பேசியது தற்போது வைரலாகி வருகிறது.