இந்தி தெரியாது போயா.. வெளியானது ரகு தாத்தா பட டீசர்..!
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரகு தாத்தா’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தசரா’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதைத் தொடர்ந்து இவர் தற்போது ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் ‘ரகு தாத்தா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுமன் குமார் எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில், இந்தப் படத்தின் டீசரை கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “கயல்விழியின் அட்டகாசமான நகைச்சுவை பயணத்தை காண தயாராகுங்கள். ரகு தாத்தா விரைவில் உங்கள் அருகில் உள்ள திரையரங்குகளில்...” என டீசரை வெளியிட்டுள்ளார்.
இந்த டீசரின் ஆரம்பம் முதல் இறுதி வரை காமெடியில் கலங்கடிக்கிறது. முழுக்க முழுக்க இந்தி மொழி திணிப்புக்கு எதிராக உருவாகியுள்ள இந்த டீசரில், காமெடிக்கும் பஞ்சமில்லை. “இந்தி எக்ஸாம் எழுதினா தான் ப்ரொமோஷன் கிடைக்கும்னா எனக்கு ப்ரொமோஷனே வேண்டாம்” என கீர்த்தி சுரேஷ் பேசிய வசனம் வைரலாகி வருகிறது.