சினிமாவில் பாட வாய்ப்பு வரல.. ஹோட்டல் வேலைக்கு போறேன்.. பிரபல பாடகரின் பரிதாப நிலை

 

பிரபல பாடகர் சத்யன் சினிமாவில் தான் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் பற்றி மனம்விட்டு பேசி இருக்கிறார்

2004-ல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘வசூல்ராஜா எம்பிஎஸ்எஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘கலக்கப் போவது யாரு..’ பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானவர் சத்யன். தொடர்ந்து, அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தில் சில் சில் மழையே, பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் பாசு பாசு போன்ற 200-க்கும் மேற்பட்ட பாடல்களை தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பாடியுள்ளார். விழித்திரு என்ற திரைப்படம் மூலம் இசை அமைப்பாளர் ஆனார்.

இந்த நிலையில் பாடகர் சத்யன் சினிமாவில் தான் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் பற்றி மனம்விட்டு பேசி இருக்கிறார். அவர் பேசியதாவது, கொரோனாவுக்கு அப்புறமா வாய்ப்புகள் எதுவுமே இல்ல. இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் யாரும் பாட அழைக்காததால் ஹோட்டல்ல வேலைக்கு சென்றிருக்கிறேன். ஹோட்டல் மெயிட்டனன்ஸ் வேலைக்கு சென்று சம்பாதிக்க தொடங்கினேன். அந்த வேலையை அமெரிக்காவில் சுமார் 4 மாதம் செய்தேன். பணத்தேவை அதிகரித்ததால் வேலைக்கு சென்றேன். குறிப்பாக பின்னணி பாடகர்களுக்கு வாய்ப்பு பெரியளவில் கிடையாது. பின்னணி பாடகர்களாக இருந்த நிறைய பேர், இந்த வேலையே வேண்டாம் என கூறிவிட்டு விவசாயம் பார்க்க சென்றுவிட்டார்கள். 

இன்றைய காலகட்டத்தில் பாடகர்கள் சான்ஸ் கேட்டு அலைவதை விட பாப்புலர் ஆவதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். நான் ஒரு ரியாலிட்டி ஷோவில் நடுவராகவும் சென்றிருக்கிறேன், கெஸ்டாகவும் சென்றிருக்கிறேன். அந்த ரியாலிட்டி ஷோவில் நான் போட்டியாளராக கலந்துகொண்டால் பாப்புலர் ஆகலாம் என முடிவு செய்து அதில் கலந்துகொள்ள வாய்ப்பு கேட்டேன். ஆனால் அவர்கள் என்னை போட்டியாளராக களமிறக்கினால் பிரச்சனை வரும் என சொல்லி மறுத்துவிட்டனர்.

இன்றைய சூழலில் இசையமைப்பாளர்களே பாப்புலர் ஆனவர்களை தேடி தான் செல்கிறார்கள். வெகு சில இசையமைப்பாளர்களின் கச்சேரிகளை தான் அந்த இசையமைப்பாளர்களுக்காக மட்டும் வந்து பார்க்கிறார்கள். உதாரணத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அனிருத். அவர்கள் கச்சேரி என்றால் அவர்களுக்காக மட்டும் மக்கள் வருகிறார்கள். ஆனால் மற்ற இசையமைப்பாளர்கள் நடத்தும் கச்சேரிகளில் பாடகர்கள் யார் வருகிறார்கள் என்பதையும் போடுகிறார்கள். அவர்களெல்லாம் யார் என்று பார்த்தால் பிரபல இசை நிகழ்ச்சி மூலம் பாப்புலர் ஆனவர்களாக இருக்கிறார்கள் என தன் ஆதங்கத்தை கொட்டி இருக்கிறார்.