மது போதையில் கார் ஓட்டவில்லை.. வதந்திக்கு விளக்கும் கொடுத்த எதிர்நீச்சல் நடிகை!

 

மது போதையில் வாகனம் ஓட்டியதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் நடிகை மதுமிதா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

கோலங்கள், அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களை இயக்கியவர் திருச்செல்வம். தற்போது சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ தொடரை இயக்கியுள்ளார். இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஆணாதிக்கத்துக்கு எதிராக பெண்கள் தைரியமாக போராட வேண்டும் என்கிற கருத்தை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மதுமிதா, தனது காரில் சோழிங்கநல்லூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, ரவிக்குமார் என்பவரது மோட்டார் சைக்கிள் மீது அவரது கார் மோதியது. இதில் காயமடைந்த ரவிக்குமார், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மதுமிதா மீது பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், சிறு காயங்கள் ஏற்படுத்துதல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காயம் அடைந்த ரவிக்குமார் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார். இவர் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் எழுத்தராக வேலை பார்த்து வருகிறார்.

இதனிடையே மதுமிதா மது போதையில் வாகனம் ஓட்டியதாக தகவல்கள் பரவின. இது குறித்து நடிகை மதுமிதா தற்போது விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி ஒரு போலீஸ்காரர் மீது மோதியதாகவும், அந்த போலீஸ்காரருக்கு தீவிர காயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது.

A post shared by Madhumitha H (@madhumitha.h_official)

அதில் எந்த உண்மையும் இல்லை. எனக்கு மதுப்பழக்கம் கிடையாது. ஒரு சிறிய விபத்து நடந்தது உண்மைதான். அந்த போலீஸ்காரர் தற்போது நலமுடன் இருக்கிறார். நானும் நலமாக இருக்கிறேன். எனவே போலியான செய்திகளை தயவு செய்து நம்ப வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.