இறுதி சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை.. மன்னிச்சிடுங்க.. மறைந்த இயக்குநரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த விஜய்!

 

மறைந்த இயக்குநர் சித்திக்கின் குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் தொலைபேசி வாயிலாக அழைத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

1986-ம் ஆண்டு வெளியான ‘பாப்பன் பிரியப்பேட்டை பாப்பன்’ என்ற படத்தின் மூலம் கதாசிரியராக அறிமுகமானவர் சித்திக். முதல் படத்திலேயே தனது வித்தியாசமான கதைக்களத்தின் மூலம் மலையாள சினிமா ரசிகர்களை கவர்ந்தார். அதைத்தொடர்ந்து மோகன்லால் நடித்த ‘நாடோடிக்காட்டு’ என்கிற படத்திலும் கதை எழுதினார்.

1989-ம் ஆண்டு வெளியான ‘ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சித்திக். அதனைத் தொடர்ந்து ‘காட்ஃபாதர்’, ‘வியட்நாம் காலனி’, ’ஹிட்லர்’ உள்ளிட்ட ஏராளமான மலையாள படங்களை இயக்கியுள்ளார். அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களின் விருப்பத்திற்குரிய இயக்குநராகவும் மாறினார்.

தமிழில் ப்ரெண்ட்ஸ், எங்கள் அண்ணா, காவலன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களை சித்திக் இயக்கியுள்ளார். இவரது படங்களில் காமெடிக்கு பஞ்சமிருக்காது. இவரது மலையாள படங்களான அரங்கேற்ற வேளை, வியாட்னாம் காலனி, மிலிட்டரி என்ற பெயரில் ரீமேக் ஆகியிருக்கின்றன. நடிகர் லாலுடன் இணைந்து சித்திக் - லால் என்ற பெயரில் ஏராளமான படங்களை இயக்கியிருக்கிறார்.

இந்த நிலையில், இயக்குநர் சித்திக் கடந்த 8-ம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவரது மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரது மறைவுக்கு திரைபிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர். ஆனால் இவரது மறைவுக்கு நடிகர் விஜய் தரப்பில் எந்த இரங்கலும் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், நடிகர் விஜய் இன்று இயக்குநர் சித்திக்கின் குடும்பத்தினருக்கு தொலைபேசி வாயிலாக அழைத்து இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் வெளிநாட்டில் இருப்பதால் சித்திக்கின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை என வருத்தம் தெரிவித்திருக்கிறார். இயக்குநர் சித்திக் நடிகர் விஜய்யை வைத்து ப்ரெண்ட்ஸ், காவலன் என இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.