மாரிமுத்து இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது.. நடிகர் ரஜினிகாந்த் ட்வீட்!

 

இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் வருஷநாடு பகுதி பசுமலை கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் நடிகர் மாரிமுத்து. திரைத்துறையில் பணியாற்றுவதற்காக சென்னை வந்த நடிகர் மாரிமுத்து, கவிப்பேரரசு வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றினார். பின்னர் திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார்.  ராஜ்கிரணிடம் அரண்மனை கிளி, எல்லாமே என் ராசாதான் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா, ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய தமிழ் படங்களை இயக்கியுள்ளார். 2011-ல் யுத்தம் செய் படத்தில் மாரிமுத்துவை நடிகராக அறிமுகம் செய்தார் இயக்குநர் மிஷ்கின். வாலி, உதயா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நடித்தார். தற்போது வெளியான ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து நடித்திருந்தார்.

நடிகர் மாரிமுத்து தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் அறியப்பட்டார். சீரிய பகுத்தறிவாதியாக திகழ்ந்து டிவி விவாதங்களிலும் அதனை முழுமையாக வலியுறுத்தி பேசிவந்தார்.

இந்நிலையில் இன்று காலை டிவி தொடருக்கு டப்பிங் பேசிக் கொண்டிருந்த போது நடிகர் மாரிமுத்துவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நடிகர் மாரிமுத்து உயிர் பிரிந்தது. நடிகர் மாரிமுத்துவின் மரணம், திரை உலகத்தினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.