விவாகரத்து பின்னும் ராமராஜனை காதலிக்கிறேன்.. மனம் திறந்த முன்னாள் நடிகை..!

 

நடிகர் ராமராஜனை தான் இன்னும் காதலித்து வருவதாக நடிகை நளினி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

1980-களில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை நளினி. இவர், 1981-ல் வெளியான ‘ராணுவ வீரன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து உயிருள்ளவரை உஷா, தங்க்ககோர் கீதம், நூறாவது நாள், பிள்ளை நிலா, கீதாஞ்சலி, பாலைவன ரோஜாக்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிகரும், டைரக்டருமான ராமராஜனை காதலித்து கடந்த 1987-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தனர். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நளினி, நிகழ்ச்சியொன்றில் பழைய நினைவுகளை பகிர்ந்தார்.

நளினி கூறும்போது, “நான் பிசியான நடிகையாக இருந்த காலத்தில் வருடத்துக்கு 24 படங்களில் நடித்தேன். சாப்பிட வேண்டும், தூங்க வேண்டும் என்பதற்காகவே திருமணம் செய்து கொள்ள நினைத்தேன்.

அப்போதுதான் ராமராஜனை காதலித்தேன். நானும், சுரேசும் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ராமராஜனுடன் நான் ஓடிப்போக முடிவெடுத்தேன். அதை சுரேஷிடம் சொன்னேன். அவர் பதறிவிட்டார். ஓடிப்போக வேண்டாம், உன் அம்மாவுக்கு யார் பதில் சொல்வது? என்று டென்ஷன் ஆனார். எங்கள் காதல் விவகாரம் பெற்றோருக்கும் தெரிய வந்தது.

இதனாலேயே ராமராஜன் படங்களில் நடிக்க அனுமதிக்காமல் இருந்தனர். அந்த சமயம் நிழல்கள் ரவியுடன் ஜோடி சேர்ந்து ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது எங்கள் காதலுக்கு நிழல்கள் ரவிதான் தூது போனார். இதெல்லாம் மறக்க முடியாத அனுபவங்கள்.

ராமராஜன் ஒரு நல்ல நடிகர். பாவம், தெரியாமல் என்னை காதலித்து கல்யாணம் பண்ணிக்கிட்டார். அவர் மிகவும் தங்கமானவர்தான். ஆனால் ஏனோ எங்கள் இருவர் இடையே 'மேட்ச்' ஆகவில்லை. பிரிந்து விட்டோம். விவாகரத்து ஆனாலும் ராமராஜனை இன்னும் நான் காதலிக்கத்தான் செய்கிறேன். இது அவருக்கும் தெரியும்” என்றார்.