5 Ball-ல 5 Six எப்படி கண்ணா? சென்னை வரும்போது சந்திக்கலாம்.. ரிங்கு சிங்கிற்கு ரஜினிகாந்த் பாராட்டு!!

 

நடிகர் ரஜினிகாந்த் கொல்கத்தா அணியின் இளம் கிரிக்கெட் வீரரான ரிங்கு சிங்கிற்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தை வைத்து ‘ஜெயிலர்’ படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் இந்தப் படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முத்துவேல் பாண்டியன் என்ற வேடத்தில் ரஜினி நடித்து வருகிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இந்த படம், வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் ஓய்வு நேரங்களில் புதுசா ரீலிஸ் ஆகுற படங்கள் தொடங்கி ஐபிஎல் மேட்ச் வரை கண்டு ரசித்து வருகிறார். மேலும், திறமையான இளைஞர்கள், இளம்வயது சாதனையாளர்கள் தொடங்கி அனைவரையும் நேரிலோ அல்லது போன் மூலமாக அழைத்து வாழ்த்தி உற்சாகப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது சினிமா, அரசியல் எல்லாவற்றையும் தாண்டி, கிரிக்கெட் வீரரான ரிங்கு சிங்கிற்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளாராம் ரஜினிகாந்த். நடப்பு ஐபிஎல் தொடரில், தன்னுடைய அதிரடியான பேட்டிங்கால் 5 சிக்சர்களை பறக்கவிட்டு, ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையை படைத்திருந்தார், கொல்கத்தா அணி வீரரான ரிங்கு சிங்.

அவருடைய அபாரமான பேட்டிங்கானது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்லாமல், சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்தையும் வியக்கவைத்துள்ளது. அவரின் பேட்டிங் திறமையை பாராட்ட நினைத்த ரஜினி, அவருக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தது மட்டுமல்லாமல், சென்னை வரும்போது நேரில் சந்திக்கலாம் என்று இன்வைட்டும் செய்திருக்கிறாராம்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருக்கும் செய்தியின்படி, ரிங்கு சிங்கிற்கு தனிப்பட்ட முறையில் போன் செய்த ரஜினிகாந்த், நிறைய வாழ்த்துக்களையும், உற்சாகப்படுத்தக்கூடிய வார்த்தைகளையும் பகிர்ந்துள்ளாராம். அடுத்தமுறை நீங்கள் சென்னை வரும்போது நிச்சயம் உங்களை சந்திக்கிறேன் எனவும் உறுதியளித்துள்ளாராம். ரஜினி பேசியதில் நிறைய புரியவில்லை என்றாலும், அவருடைய அழைப்பை எதிர்பார்க்காத ரிங்கு சிங், அதீத மகிழ்ச்சியுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி, வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில், அன்றைய நாளில் ரஜினியும், ரிங்கு சிங்கும் மீட் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் பட ஷூட்டிங்கிற்காக ரஜினி மும்பையில் இருப்பதால், அவர்களுடைய சந்திப்பானது தள்ளிப்போகவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.