ஹாரிபாட்டர் பட நடிகர் மைக்கேல் காம்பன் திடீர் மரணம்.. ரசிகர்கள் சோகம்!

 

பிரபல ஹாலிவுட் பழம்பெரும் நடிகர் மைக்கேல் காம்பன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 82.

1940-ம் ஆண்டு பிறந்த நடிகர் மைக்கேல் காம்பன், தனது 22வது வயதில் சினிமாவில் அறிமுகமானார். நாடக நடிகராக இருந்து ஹாலிவுட்டில் அடியெடுத்து வைத்த மைக்கேல் காம்பன், பின்னாட்களில் மிகப் பெரிய ஆளுமையாக உருவெடுத்தார்.

ஹரி பாட்டர் பட சீரிஸில் ஆறு படங்களில் நடித்துள்ளார் மைக்கேல் காம்பன். இந்தப் படத்தில் புரொபசர் ஆல்பஸ் டம்பில்டோர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மைக்கேல் காம்பன். ஹாரி பட்டர் தவிர கோஸ்ஃபோர்ட் பார்க், ஓபன் ரேஞ்ச், பிரிட்டிஷ் கேங்ஸ்டர் படமான லேயர் கேக், அமேசிங் கிரோஸ், தி கிங்ஸ் ஸ்பீச் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

நான்கு முறை பிரிட்டிஷ் அகாடமி விருதுகளை வென்றுள்ள மைக்கேல் காம்பன், ஹாலிவுட்டின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக நிமோனியா பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து வாஷிங்டனில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், வயது முதிர்வு காரணமாக சிகிச்சை பலனளிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இதனால், நேற்று மைக்கேல் காம்பன் உயிரிழந்தார். இதனை அவரது மனைவியும் மகனும் உறுதி செய்துள்ளனர். மேலும், மைக்கேல் காம்பன் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி எனவும் உருக்கமாக தெரிவித்துள்ளனர். மைக்கேல் காம்பன் மறைவை அறிந்த ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் ஹாலிவுட் நட்சத்திரங்களும் மைக்கேல் காம்பன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.