கஜினி பட நடிகை தற்கொலை வழக்கு... காதலன் விடுதலை.. மும்பை நீதிமன்றம் உத்தரவு!!

 

ஜிஹா கான் தற்கொலை வழக்கில் நடிகர் சுராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் இருந்து விடுதலையாகி உள்ளார்.

2007-ல் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான ‘நிஷாபத்’ படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானவர் ஜிஹா கான். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இந்தியில் வெளியான கஜினி திரைப்படத்திலும் நடித்து பிரபலமடைந்தார்.

இதனிடையே, 2013-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி ஜிஹா கான் மும்பையின் ஜுஹூ நகரில் தனது வீட்டில் படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். ஜிஹா கான் பிணமாக மீட்கப்பட்ட நிலையில் அவர் எழுதிய தற்கொலை கடிதத்தை போலீசார் கைப்பற்றினார்.

இதனை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் தற்கொலை செய்த நடிகை ஜிஹா கானின் காதலன் நடிகர் சுராஜ் பன்ஜொலியை 2013 ஜூன் மாதம் கைது செய்தனர். பின்னர் ஜூலை மாதம் சுராஜ் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

தனது மகளை நடிகர் சுராஜ் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக ஜிஹா கானின் தாயார் குற்றஞ்சாட்டினார். ஆனால், அந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் சுராஜ் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்தது.

இதனிடையே, நடிகை ஜிஹா கானை தற்கொலைக்கு தூண்டியதாக நடிகர் சுராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்கு மும்பையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், நடிகை ஜிஹா கானை தற்கொலை வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் நடிகர் சுராஜ் குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்து அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்தது.