வெளியானது ‘கங்குவா’ க்ளிம்ப்ஸ் வீடியோ.. சூர்யா ரசிகர்களுக்கு செம ட்ரீட்!!
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கங்குவா’. சூர்யாவின் 42-வது படமாக உருவாகும் இதில் திஷா பதானி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உட்பட பலர் நடிக்கின்றனர். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இப்போது கொடைக்கானல் பகுதியில் அடர்ந்த காட்டில் படமாக்கப்பட்டு வருகிறது. வரலாற்றுக் காட்சிகள் தொடர்பான படப்பிடிப்பு நடக்கிறது. இந்த படம் 9ம் நூற்றாண்டில் தொடங்கி 21ம் நூற்றாண்டு வரை தொடர்வது போல் கதை எழுதப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கான படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை படத்தின் நாயகன் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு 23ம் தேதி நள்ளிரவு 12.01-க்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
அதன்படி 'கங்குவா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் இதுவரை பார்த்திராத புதிய தோற்றத்தில் மாஸ் காட்டியிருக்கிறார் நடிகர் சூர்யா. பிரம்மாண்ட காட்சிகளுடன் வெளியாகி உள்ள இந்த கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.