ஆஸ்கார் தேர்வு குழுவில் பிரபல இயக்குநர் மணிரத்னம்..!

 

ஆஸ்கர் உறுப்பினர் குழுவின் புதிய உறுப்பினராக இயக்குநர் மணிரத்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

உலக அளவில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. இந்த விருதை வாங்க வேண்டும் என்பது, திரை துறையைச் சேர்ந்த ஒவ்வொரு தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகளின் மிகப்பெரிய கனவு என்றே கூறலாம். 

உலகின் மிக முக்கிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகளில் பன்முகத்தன்மை இல்லை என்று எழுந்த விமர்சனத்தை அடுத்து, விருதுக்கானவர்களைத் தேர்வு செய்வதற்காக, புதிய உறுப்பினர்களை அழைக்க ஆஸ்கர் அமைப்பு முடிவு செய்தது. அதன்படி கடந்த சில வருடங்களாக புதிய உறுப்பினர்கள் அழைக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் 2023-ம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான பட்டியலை ஆஸ்கர் வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2023ம் ஆண்டு ‘ஆஸ்கர் விருதுகள்’ தேர்வுக்குழுவுக்கு இந்தியர்கள் உட்பட 398 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.