கழிவறையில் பிரபல பாலிவுட் இளம் நடிகர் மர்ம மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்!

 

பிரபல பாலிவுட் இளம் நடிகர் ஆதித்யா சிங் கழிவறையில் மர்ம மரணம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் திரையுலகில் பிரபல இளம் நடிகராக வலம் வந்தவர் ஆதித்யா சிங் ராஜ்புத். மாடல் மற்றும் நடிப்பு தொழிலுக்கான ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பணிகளிலும் அவர் ஈடுபட்டு வந்து உள்ளார். இந்த நிலையில், மும்பை நகரில் அந்தேரி பகுதியில் உள்ள 11-வது மாடியில் வசித்து வந்த அவர், கழிவறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

நடிகர் ஆதித்யாவை முதலில் அவரது நண்பர் பார்த்து உள்ளார். உடனடியாக, கட்டிட காவலாளி உதவியுடன் ஆதித்யாவை அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்று உள்ளனர். எனினும், அவர் உயிரிழந்து விட்டார் என கூறியுள்ளனர். அதிக அளவில் போதை பொருள் எடுத்து கொண்டதில் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. 

ஆரம்ப காலத்தில் மாடலாக பணிபுரிந்த டெல்லியை சேர்ந்த ஆதித்யா சிங், நடிகரான பின்னர், பல புதிய முகங்களை திரைக்கு அறிமுகப்படுத்தி உள்ளார். பல நடிகர்களுடன் இணைந்தும் நடித்து உள்ளார். கிரந்திவீர் மற்றும் மெய்னே காந்தி கோ நஹின் மரா உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து உள்ளதுடன், 300 விளம்பரங்களிலும் நடித்து உள்ளார். ஆதி கிங், மம் அண்டு டேட், லவ்வர்ஸ் உள்ளிட்ட படங்களிலும் நடித்து உள்ளார்.

ஸ்பிளிட்ஸ்வில்லா 9 என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் பங்கேற்று உள்ளார். லவ், ஆஷிக், கோட் ரெட், ஆவாஸ் சீசன் 9, பேட் பாய் சீசன் 4 மற்றும் பிற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு உள்ளார். விருந்து நிகழ்ச்சிகளில் அவர் தவறாமல் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. இந்த நிலையில், அவரது திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரை துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.