ஜப்பான் நிலநடுக்கத்தில் சிக்கிய பிரபல நடிகர்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

 

பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆர் ஜப்பானில் பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்ட போது அங்கிருந்ததாக தெரிவித்துள்ளார்.

1991-ல் என்.டி.ராமராவ் எழுதி, இயக்கி  நடித்த பிரம்மர்ஷி விஸ்வாமித்ரா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஜூனியர் என்.டி.ஆர். அதன் பிறகு 2001-ல் நின்னு சூடலானி திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள இவர், தற்போது கொரட்டாலா சிவா இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியாகும் 'தேவரா' படத்தில் பிஸியாக இருக்கிறார். ஜூனியர் என்டிஆர் தவிர, ஜான்வி கபூர் மற்றும் சைஃப் அலி கான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஜூனியர் என்டிஆர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி வெளிநாடு செல்வார்கள். இந்த ஆண்டு, அவர் தனது மனைவி லட்சுமி பிரணதி மற்றும் அவரது 2 குழந்தைகளான அபய் மற்றும் பார்கவ் ஆகியோருடன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை ஜப்பானில் கழித்தார்.

நிலநடுக்கம் ஏற்பட்ட போது ஜப்பானில் இருந்த நடிகர் ஜூனியர் என்டிஆர், எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்த பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “ஜப்பானில் இருந்து இன்று வீடு திரும்பினேன். ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன். கடந்த வாரம் முழுவதும் அங்கேயே இருந்தேன். பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் அதிலிருந்து மீண்டு குணமடைய வேண்டும் என்று நம்புகிறேன். வலிமையாக இருங்கள், ஜப்பான்” என்று பதிவிட்டுள்ளார்.