ஃபகத் பாசிலுக்கு ADHD என்ற அரியவகை நோய்.. பாதிப்பை குணப்படுத்த முடியுமா?

 

பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் தனக்கு அரியவகை ADHD என்ற நரம்பியல் தொடர்பான நோய் இருப்பதாக தெரிவித்துள்ள ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

2001-ல் வெளியான ‘கையேதும் தூரத்’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் ஃபகத் பாசில். அதனைத் தொடர்ந்து ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ‘வேலைக்காரன்’ படத்தில் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் இவரின் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துப்போனதால், அடுத்தடுத்து தமிழ் படங்களில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து சமந்தாவுடன் சூப்பர் டீலக்ஸ் படத்தில் இணைந்து நடித்தார்.

அதன்பின் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமான ‘விக்ரம்’ படத்தில் அமர் எனும் கதாபாத்திரத்தில் நடித்து பெயர் எடுத்த இவர், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்த ‘மாமன்னன்’ படத்தில் ரத்னவேலு என்ற கேரக்டரில் பின்னிபெடல் எடுத்துவிட்டார். இந்த படம் வெளியான போது மீம்ஸ் கிரியேட்டர்கள் ஃபகத்தை தலையில் தூக்கிவைத்து கொண்டாடினார்கள்.

மாமன்னன் படத்திற்கு பிறகு இந்தியளவில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த ஃபகத் பாசிலின் நடிப்பில் அண்மையில், மலையாளத்தில் வெளியான ஆவேஷம் வெளியானது. அப்படத்தில், ஃபகத் பாசில் உடன் ஹிப்ட்ஸர், மிதுன், ரோஷன் ஷநவாஸ் உட்பட பலர் நடித்திருந்தனர். அப்படத்தில், ஃபகத் பாசிலின் அடுத்த பரிமானத்தை பார்க்க முடிந்தது. மலையாளம் தெரியாத தமிழ் ரசிகர்களும், ஃபகத் பாசிலுக்காக அந்த படத்தை பார்த்து ரசித்தனர். இப்படி தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்ட ஃபகத் பாசில், ட்ரெண்டிங் ஸ்டாராக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஃபகத் பாசில் தான், ADHD (Attention-deficit/Hyperactivity disorder) என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறினார். இணையத்தில் இந்த செய்தி காட்டுத் தீபோல பரவி பலரும் ADHD என்றால் என்ன அது மூளையை என்ன செய்யும் என்று ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்த நரம்பியல் நோய் குறித்து மருத்துவர்கள் சொல்லும் தகவல்கள்.

ஏடிஹெச்டி என்பது மூளையின் கட்டுப்பாடோடு தொடர்புடைய பிரச்னை. இதை டெவெலப்மென்டல் கண்டிஷன் (Developmental Condition) என்போம். பொதுவாகவே பிறந்ததிலிருந்தே இந்தப் பிரச்னை இருக்கும். AD என்பது கவனக்குறைவு (Attention Deficit); HD என்பது ஹைப்பர் ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர் (Hyperactivity disorder).

ஏடிஹெச்டி பாதிப்புள்ளவர்களுக்குக் கவனக் குறைவு இருக்கும். இவர்கள் எளிதாக டிஸ்ட்ராக்ட் ஆவதோடு, துறுதுறுவென இருப்பார்கள். இவர்களுக்கு ஹைப்பர் ஆக்டிவிட்டி அதிகமாக இருக்கும். இந்த பாதிப்பு பொதுவாக குழந்தைகளுக்கு இருக்கும். ஆனால், பெரியவர்களையும் பாதிக்கலாம். இந்த பாதிப்பு நம் மூதாதயர்களுக்கு இருந்தால் நம்மை பாதிக்கும் என்றும், குறைமாத பிரசவத்தில் பிறகும் குழந்தைக்கு இந்த பாதிப்பு இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இந்த நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு மறதி, படபடப்பு, அமைதியின்மை போன்ற அறிகுறிகள் இருக்கும். இதனால் இவர்களால் சரியான நேரத்தில் எந்த வேலையையும் செய்ய முடியாது, எந்த வேலை செய்தாலும் அதில் கவனச்சிதறல் இருக்கும், இதனால், இளம் வயதினருக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். இதில் இருந்து விடுபட தியானம், மனநல தெரப்பிகள் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறுகின்றனர்.