விடாமுயற்சி படத்திற்கு அசர்பைஜான் தேவையில்லையா?

 

அஜித்குமார் நடிப்பில் வெளிவந்துள்ள விடாமுயற்சி படத்திற்கு பலதரப்பட்ட விமர்சனங்கள் வந்துள்ளது. ஆங்கில படமான ப்ரேக்டவுண் படத்தின் உரிமையைப் பெற்று தமிழில் தயாரித்துள்ள படம் தான் விடாமுயற்சி. இந்தப் படத்தை திரைப்பட விமர்சர்கள் என்று சமூகத்தளங்களில் பேசி வருபவர்கள் பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இந்தப் படத்தை ஏன் அசர்பைஜானுக்குச் சென்று எடுக்க வேண்டும். இந்தியாவில் இத்தகைய சாலைகளே இல்லையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். தயாரிப்பு தரப்பில் இது ஆங்கிலப்படத்தின் தழுவல் தான் என்று தெரிவிக்கப்பட்ட பிறகு, அதை ஏன் இந்தியமயமாக்கவில்லை என்ற கேள்வி விசித்திரமாக இல்லையா?
அசர்பைஜானில் வில்லன்கள் ஏன் தமிழர்களாக மட்டுமே இருக்கிறார்கள் என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் தமிழர்கள் நிறைந்து உள்ளனர் என்பது இவர்களுக்குத் தெரியாது போல.

த்ரிஷா எப்படி டிப்லிஸ் நகரில் வளர்ந்தார், பாஹாவுக்கு ஏன் சென்றார் என்ற காட்சிகளில் கூறப்பட்டுள்ளது. அஜித் அங்கு ஏன் வந்தார் என்ன செய்கிறர் என்பதும் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. அர்ஜுனும் ரெஜினா காசண்ட்ராவும் அங்கே ஜெயில் பறவைகளாக காதலித்தவர்கள் என்பதும் தெரியப்படுத்தப்படுகிறது. ரெஜினா காசண்ட்ரா ஒரு நல்ல வில்லியாக தொடர வாழ்த்துகள்.

ஒன்றரை மணி நேரம் கொண்ட ஆங்கிலப்படத்தை இந்திய கதையமைப்பு சேர்த்து இரண்டரை மணி நேரப்படமாக மாற்றியுள்ளனர். முதல் பாதியில் அஜித் - த்ரிஷா இணையர்களின் காதல் காட்சிகள் இன்னமும் ஃப்ரெஷ் ஆக இருக்கிறது. அவ்வப்போது வந்து போகும் இந்தக் காட்சிகள் படத்திற்கு சுவராசியம் கூட்டத் தவற வில்லை.

நெடுஞ்சாலைக் காட்சிகளும் பரபரப்பை கூட்டத்தான் செய்கிறது. ப்ரேக்டவுண் படம் பார்க்காதவர்களுக்கு இந்தப்படம் ஹாலிவுட் தரமான இந்தியப்படமாகக் கட்டாயம் தெரியும். முன்கூட்டியே கதை தெரிந்தவர்கள் தான் விடாமுயற்சியை பங்கம் செய்கிறார்கள் போலும். கதையின் திருப்பங்கள் நன்றாகவே அமைக்கப்பட்டுள்ளது. அஜித் , அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் என அனைவரும் படத்திற்கு ஆதாரமாக இருக்கிறார்கள்.

படமாக்கமும், காட்சிகளும் தமிழ் பேசும் ஹாலிவுட படம் என்றே சொல்கிறது. ஒளிப்பதிவு இயக்குனருக்கு பெரும் பாராட்டுக்களை தாராளமாகச் சொல்லலாம்.  ப்ரேக்டவுண் படத்தின் தழுவல் என்ற ஒன்று தான் இந்தப்படத்திற்கு மைனஸ் எனலாம். தமிழ் இயக்குனர்கள் முழுமையான ஹாலிவுட் கதையமைப்புடன் இத்தகைய படங்களை ஒரிஜினலாக தருவதற்கு விடாமுயற்சி நல்ல முன்னுதாரணமாகும்.