இயக்குநர் சங்கர் மகள் திருமணம்.. நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

 

இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமண விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். 

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ஷங்கர். இவரது மனைவி ஈஸ்வரி. இந்த தம்பதியினருக்கு ஐஸ்வர்யா ஷங்கர், அதிதி ஷங்கர், அர்ஜித் ஷங்கர் என இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அதில் அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். தற்போது இவர் தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் கடந்த 2022-ம் ஆண்டு மகாபலிபுரத்தில் பிரம்மாண்ட முறையில் திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணத்திற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

ஆனால் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவும் ரோஹித்தும் ஆறு மாதங்கள் கூட ஒன்றாக சேர்ந்து வாழவில்லை. திருமணமான உடனே ரோஹித் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும், அதுமட்டுமல்லாமல் ரோஹித் மீது பல குற்றச்சாட்டுகளும் புகார்களும் உள்ளதாகவும் தகவல் வெளியானது. அதனால் ரோஹித்தும் ஐஸ்வர்யாவும் சட்டப்படி மணமுறிவு பெற்று பிரிந்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குநர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு 2-வது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஏப்ரல் 15-ம் தேதி அன்று திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி திருமண பணிகளில் ஷங்கர் தீவிரமாக ஈடுபட்டார். பல முக்கிய பிரமுகர்களுக்கு திருமண அழைப்பிதழ் வழங்கினார். மேலும் திருமண விழாவை தடபுடலாக நடத்த ஏற்பாடு செய்தார்.

இந்நிலையில் இன்று  சென்னையில் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விக்ரம், விஷால், அர்ஜுன் இயக்குநர்கள் பாரதிராஜா,மணிரத்னம் -சுஹாசினி, கே.பாக்யராஜ், பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார், ஹரி, விஷ்ணு வர்தன், விக்னேஷ் சிவன் - நயன்தாரா, ரவி குமார், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட பலர் நேரில் வாழ்த்தினர்.