யோகி பாபுவை செமையாய் கலாய்த்த தல தோனி.. ‘LGM’ படத்தின் இசை வெளயீட்டு விழாவில் நடந்த சம்பவம்!

 

‘எல்ஜிஎம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் யோகி பாபுவை தல தோனி கலாய்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கிரிக்கெட்டின் கூல் கேப்டன் என்று அழைக்கப்படுபவர் எம்.எஸ்.தோனி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் தோனி அவ்வப்போது விவசாயம், ராணுவத்தினருடன் பயிற்சியில் ஈடுபடுவது போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி தோனி படத் தயாரிப்பில் களமிறங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

அந்த வகையில் தோனி என்டெர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக “Lets Get Married” என்ற படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் இளம் பெண்களின் கனவு கண்ணனாக வலம் வரும் ஹரீஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக லவ் டுடே படத்தின் மூலம் இளைஞர்களை கவர்ந்த இவானா நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் 80’ஸ் நாயகி நதியாவும், ட்ரெண்டிங் காமெடி நடிகர் யோகி பாபு என பலரும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

தமிழில் விட்னெஸ், தெலுங்கில் அஹம் பிரம்மாஸ்மி படங்களை இயக்கிய ரமேஷ் தமிழ்மணி இப்படத்தை இயக்க, அவரே படத்திற்கும் இசையும் அமைத்திருக்கிறார். இந்த நிலையில், இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா கடந்த 10-ம் தேதி சென்னையில் நடந்தது. ‘எல்ஜிஎம்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் எம்.எஸ்.தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தன்னை சேர்த்துக் கொள்ளுமாறு யோகி பாபு கேட்டுக் கொண்டார்.

அதற்கு தோனி சொன்ன வேடிக்கையான பதில் இப்போது சமூக வலைதளங்களில் வைரலானது. யோகி பாபுவுக்கு பதில் சொன்ன தோனி, “ராயுடு ஓய்வு பெற்றுள்ளார். எனவே, சிஎஸ்கேயில் உங்களுக்கு இடம் உள்ளது. நான் நிர்வாகத்திடம் பேசுகிறேன். ஆனால், நீங்கள் படங்களில் மிகவும் பிஸியாக இருக்கிறீர்கள். நீங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும். அவர்கள் மிக வேகமாக பந்து வீசுகிறார்கள், அவர்கள் உங்களை காயப்படுத்துவதற்காக மட்டுமே பந்து வீசுவார்கள்.” என்று கூறினார்.


இதுதொடர்பான வீடியோக்கள் ஏற்கனவே வைரலான நிலையில், தற்போது அதிகம் பார்க்கப்படாத ஒரு புதிய வீடியோ வைரலாகி வருகிறது. ‘எல்ஜிஎம்’ வெளியீட்டு விழாவின் கேக் வெட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அந்த வீடியோவில் யோகி பாபுவும் தோனியும் கேக் வெட்டுவதைக் காணலாம். யோகி பாபு கேக்கை வெட்டிக் கொண்டிருக்கும் போதே, தோனி ஒரு கேக் துண்டை எடுத்து சாப்பிடுகிறார். ஆனால் யோகி பாபு ஏமாற்றத்துடன் பார்க்கும் போது, தோனி கலகலவென்று சிரிப்பதை பார்க்கலாம். பின்னர் தோனி அவருக்கு கேக்கை ஊட்டிவிடுகிறார்.