இளையராஜா பயோபிக் படத்தில் நடிகர் தனுஷ்.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.. இளையராஜா நெகிழ்ச்சி!
நடிகர் தனுஷ் நடிக்கும் இளையராஜா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
தேனி மாவட்டம் பண்ணைப்புரம் கிராமத்தில் பிறந்த இளையராஜா, 1976-ம் ஆண்டு தேவராஜ் - மோகன் இயக்கத்தில் பஞ்சு அருணாச்சலம் திரைக்கதை எழுதி வெளியான ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இதுவரை இளையராஜா பல்வேறு மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவரது 1,000-வது படம் இயக்குநர் பாலாவின் ‘தாரை தப்பட்டை’. இவர் 2010-ம் ஆண்டு ‘பத்ம பூஷன்’ விருதையும் 2018-ம் ஆண்டு ‘பத்ம விபூஷன்’ விருதையும் பெற்றார்.
இந்த நிலையில், ‘இசைஞானி’ இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருக்கிறார். படத்தை தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் வெளியிடப்பட உள்ளது.