தனுஷ் பிறந்தநாள்... இட்லிகடை பாட்டு எப்படி இருக்கு?
1983ம் ஆண்டு ஜுலை 28ம் தேதி பிறந்த நடிகர் தனுஷ் இன்று 42வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். எந்த வேடத்திற்கும் பொருந்தும் உடல் மற்று முக அமைப்பு கொண்ட தனுஷ், உடலைமைப்பை மாற்றாமல் தோற்றத்தை மட்டுமே மாற்றிக் கொண்டு பல்வேறு தரப்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார்.
இன்றும் அவருக்கு கல்லூரி மாணவன் வேடமும் பொருத்தமாக உள்ளது. வயதான அப்பா வேடத்திலும் அசத்துகிறார். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா படம் தெலுங்கு மொழியில் சூப்பர் ஹிட்டடித்துள்ளது. நாகார்ஜுன் முக்கிய வேடத்தில் நடித்த இந்தப் படத்தை தெலுங்குப்படவுலகில் பிரபலமான இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியிருந்தார்.
தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்கள் கூட இவ்வளவு ஏமாளிகளாக இருக்க மாட்டார்கள் என்பதலோ என்னவோ, தமிழ் மக்கள் குபேரா படத்திற்கு வரவேற்பு அளிக்கவில்லை. இந்நிலையில் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் அடுத்ததாக வெளி வர உள்ளது. இதில் நித்யா மேனன் மீண்டும் தனுஷுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் முதல் பாடல் நேற்று வெளியாகியுள்ளது. என்ன சுகம் என்று தொடங்கும் இந்தப்பாடலை இயற்றி சுவேதா மேனனுடன் பாடியுள்ளார் தனுஷ். காதல் சொட்டச் சொட்ட தனுஷ் உருகி எழுதியுள்ள இந்தப் பாடல் வெளியான 14 மணி நேரத்திற்குள் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
தமிழில் குபேராவின் தோல்வியை மறப்பதற்காக இட்லி கடை வெற்றியை எதிர்பார்த்துள்ளனர் தனுஷ் ரசிகர்கள்.