மன உளைச்சல்.. ரூ.5 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ்.. யுவன் சங்கர் ராஜா எடுத்த அதிரடி முடிவு!

 

புகார் அளித்த வீட்டு உரிமையாளருக்கு, 5 கோடி ரூபாய் இழப்பீடு கோரி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா 6-வது தெருவில் பஷீலத்துல்ஜமீலா என்பவரின் வீட்டை கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வாடகைக்கு எடுத்து ஸ்டுடியோவாக பயன்படுத்தி வந்துள்ளார். அந்த வீட்டின் மாத வாடகை 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மற்றும் வைப்புத் தொகை 12 லட்சம் ரூபாய் என அக்ரீமெண்ட் போடப்பட்டுள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் மாத வாடகையை ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளனர். இந்த நிலையில் யுவன் சங்கர்ராஜா கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான ரூபாய் 18 லட்சம் வாடகை பணத்தை செலுத்தவில்லை என தெரிகிறது.

இதனால், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வீட்டின் உரிமையாளரிடம் இருந்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை அடுத்து, மொத்த வாடகை தொகை யான 18 லட்சம் ரூபாயில் 12 லட்சம் ரூபாய் மட்டுமே காசோலையாக வீட்டின் உரிமையாளரிடம் யுவன் சங்கர்ராஜா வழங்கினார்.

மீதமுள்ள 6 லட்சம் ரூபாய், மேலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த மாதம் வரை வாடகை தொகையான 15 லட்சம் ரூபாய் என மொத்தம் 20 லட்சத்திற்கும் மேல் வரை வாடகை பணத்தை கொடுக்கவில்லை. இதையடுத்து, வீட்டின் உரிமையாளர் ஆன்லைன் வாயிலாக யுவன் சங்கர் ராஜா மீது சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இது பொய்யான புகார் என்று விளக்கமளித்துள்ள யுவன் சங்கர் ராஜாவின் வழக்கறிஞர், யுவனின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வீட்டின் உரிமையாளர் ஜமீலா செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளார். யுவன் சங்கர் ராஜா பற்றி ஜமீலா தெரிவித்த அவதூறு கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவி விட்டதாகவும், சாதாரண சிவில் வழக்கை கிரிமினல் வழக்காக மாற்ற ஜமீலா முயற்சிப்பதாகவும் வழக்கறிஞரின் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.