துணை நடிகர் மகா காந்தியுடன் மோதல்.. உச்சநீதிமன்றத்தில் வழக்கு.. விஜய் சேதுபதிக்கு புதிய சிக்கல்..!

 

துணை நடிகர் மகா காந்தி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யகோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த விஜய் சேதுபதியின் மேல்முறையீட்டு மனு அதிரடியாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் பிசியான நடிகர் என்ற அடையாளத்துடன் வலம் வருபவர், விஜய் சேதுபதி. ஒரே சமயத்தில் கதாநாயகன், வில்லன், குணசித்திர நடிகர், சிறப்பு தோற்றம் என பலவற்றிலும் தோன்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து வருகிறார். இவரது நடிப்பு திறமையை மற்றமொழி சினிமாக்காரர்களும், ரசிகர்களும் கூட கொண்டாடி வருகிறார்கள். எளிமையான நடவடிக்கையால் தொடர்ந்து கவனம் ஈர்த்தும் வருகிறார்.

இந்நிலையில் தான் நடிகர் விஜய் சேதுபதிக்கும், சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த துணை நடிகர் மகா காந்திக்கும் இடையே நீண்டகாலமாக பிரச்சனை என்பது இருந்து வருகிறது. மேலும் நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் கடந்த 2021-ம் ஆண்டு பெங்களூரில் நடந்த சம்பவம் தான். அதாவது 2021ல் துணை நடிகர் மகா காந்தி என்பவர் நடிகர் விஜய் சேதுபதியை பெங்களூர் விமான நிலையத்தில் சந்தித்தார்.

அப்போது விஜய் சேதுபதி அவரை திட்டி, தாக்கியதாக மகா காந்தி புகார் தெரிவித்தார். மேலும் விஜய் சேதுபதிக்கு எதிராக அவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 2021 நவம்பரில் நடிகர் விஜய் சேதுபதியை பெங்களூரு விமான நிலையத்தில் சந்தித்து கைக்குலுக்கியபோது அவர் என்னை அவமானப்படுத்தி திட்டி தாக்கினர். அவர் மீது குற்றவியல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம் விஜய் சேதுபதியை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. இதையடுத்து தனக்கு எதிரான சம்மன் மற்றும் வழக்கை ரத்து செய்யக்கோரி விஜய் சேதுபதி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றமானது, “சம்பவம் நடந்தது பெங்களூர். இது சென்னை எல்லைக்குள் இல்லை. இதனால் இங்கு வழக்கு தொடர இயலாது” என தெரிவித்தது. அதோடு விஜய் சேதுபதிக்கு எதிரான புகாரை ரத்து செய்து உத்தரவிட்டது. இருப்பினும் நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கு மீதான விசாரணையை நடத்தலாம் எனவும், அதனை 3 மாதத்தில் முடிக்க வேண்டும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் சார்பில் மேல்முறையீடு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களைவிசாரித்த உச்சநீதிமன்றம், விஜய் சேதுபதிக்கு அறிவுரைகளை வழங்கியது. அதாவது இந்த வழக்கில் விஜய் சேதுபதி பொறுப்பான நபராக நடந்து கொள்ள வேண்டும். ஈகோவை விட்டுவிட்டு இருவரும் சமரசம் செய்து கொள்ள வேண்டும். வீடியோ கான்பரன்சிங் மூலம் mediation-க்கு ஆஜராகி சமரசம் ஆக வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.

ஆனால் Mediation மூலம் விஜய் சேதுபதி மற்றும் மகா காந்தி தரப்பு ஆஜராகியும் சமரசம் ஏற்படவில்லை. இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கை விஜய் சேதுபதி மற்றும் மேலாளர் ஜான்சன் எதிர்கொள்ள வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு இருவரின் உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. இதனால் விஜய் சேதுபதிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.