கக்கன் பட இசை மற்றும் டிரெய்லரை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!

 

காங்கிரஸ் மூத்த தலைவர் மறைந்த ‘கக்கன்’ பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வெளியிட்டார்.

நேர்மை, எளிமையின் இலக்கணமாக திகழ்ந்தவர் கக்கன். இவர் இந்திய சுதந்திர போராட்ட வீரர். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டவர். தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த கக்கன், காமராஜர் அமைச்சரவையில் பொதுப் பணித் துறை, மின்சாரத் துறை, தாழ்த்தப்பட்டோர் நலத் துறை ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்தார்.

அமைச்சர் பதவியில் இருந்த கக்கன் அதிகபட்சமாக நேர்மையை கடைப்பிடித்தவர். சிபாரிசு, பரிந்துரை போன்ற வார்த்தைகளை அறவே வெறுத்தார். 1971-ல் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட கக்கனுக்கு வெற்றி கிட்டவில்லை. இதனால் அவர் அரசியலில் இருந்து விலகியிருந்தார். 1981-ம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், 1981-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி காலமானார்.

இந்த நிலையில், எளிமைக்கும் நேர்மைக்கும் உதாரணமாக திகழ்ந்த கக்கனின் வாழ்க்கை இப்போது திரைப்படமாகியுள்ளது. இதில் கக்கனாக நடித்திருக்கும் ஜோசப் பேபி, படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியதுடன் தயாரித்தும் இருக்கிறார். பிரபு மாணிக்கம் இயக்கி உள்ளார். தேவா இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. கக்கன் பிறந்த ஊரான தும்பைப்பட்டி என்ற ஊரிலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

இன்று காலை சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவில், மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான கக்கனின் வாழ்கை வரலாற்று திரைப்படத்தின் இசை, முன்னோட்டம் உள்ளிட்ட ஒலிநாடாவை முதர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்நிகழ்வின் போது தியாகி கக்கனின் மகள் கஸ்தூரி பாய், சேலம் சரக காவல்துறை துணைத்தலைவர் எஸ்.ராஜேஸ்வரி மற்றும் இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், அமைச்சர் துரைமுருகன், சாமிநாதன், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.