கிங்கை வரவேற்க தயாராகும் சென்னை.. கங்குவா படத்தின் இசை வெளியீடு குறித்து வெளியான புதிய அப்டேட்!

 

சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. மாபெரும் பொருட் செலவில் உருவாகியிருக்கும் கங்குவா படத்தை ஸ்டுடியோ க்ரீன் K.E.ஞானவேல் ராஜா, யுவி கிரியேஷன்ஸ் வம்சி புரோமோத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். இந்தப் படத்திற்கு வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தின் படத்தொகுப்பை நிஷாத் யூசுப் கவனித்து வருகிறார். இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர்.

3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ள இந்த படம் அடுத்த மாதம் 14-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ‘கங்குவா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், சைனீஸ், ஸ்பானிஷ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

கங்குவா படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் இயக்குநர் சிவா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, நடிகர் நட்ராஜ் உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்து பங்கேற்று வருகின்றனர். கங்குவா படத்தின் டைட்டில் கங்குவான் என்றிருந்த நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாதான் கங்குவா என்று மாற்றியதாக படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்தனர். கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதியில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்ட நிலையில், போக்குவரத்திற்காக போகும் காட்டுப்பதியில் ஞானவேல் ராஜா தன்னுடைய சொந்த செலவில் சாலை அமைத்ததாகவும் படக்குழுவினர் ரகசியம் பகிர்ந்தனர்.


படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒருமாதம் உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீடு மிகவும் பிரம்மாண்டமாக திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே, படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்பை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. வரும் 26-ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மாலை 6 மணியளவில் இந்த நிகழ்ச்சி நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிங்கை வரவேற்க சென்னை மக்கள் தயாரா என்றும் ஸ்டூடியோ கிரீன் கேள்வி எழுப்பியுள்ளது. சிறப்பான வீடியோவையும் இந்த பதிவில் இணைத்துள்ளது.