செக் மோசடி... மறைந்த நடிகர் மனைவிக்கு 6 மாத சிறைதண்டனை.. காரைக்குடி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

 
JK Ritheesh

காரைக்குடியில் செக் மோசடி வழக்கில் மறைந்த நடிகர் ரித்தீசின் மனைவி ஜோதீஸ்வரிக்கு 6 மாத சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2007-ல் வெளியான ‘கானல் நீர்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஜே.கே.ரித்தீஷ். அதன்பின், நாயகன், பெண் சிங்கம், எல்.கே.ஜி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதேபோல அரசியலிலும் அதிரடியாக நுழைந்தார் ரித்திஷ். திமுக, அதிமுக என இரண்டிலுமே உள்ளே நுழைந்து ஒரு கலக்கு கலக்கினார். 

2009ம் ஆண்டு திமுக ஆட்சியில் ராமநாதபுரம் எம்பியாகவும் உயர்ந்தார் ரித்தீஷ். அப்போது அப்பகுதி மக்களோடு மக்களாக நன்றாக பழகி மக்களிடம் நற்பெயரை சம்பாதித்தார். மேலும் தனது தொகுதி மக்களின் கோரிக்கைகளை காதுகொடுத்து கேட்டு அவற்றை முழுமையாக நிறைவேற்றி வந்ததால், அவர் அப்பகுதி மக்களின் மனதை கவர்ந்த அரசியல்வாதியாக வலம் வந்தார்.

Ritheesh

அதன் பிறகு திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டதால், அவரது ஆதரவாளராக செயல்பட்டவர், பிறகு திமுகவில் இருந்து விலகி 2014ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலுக்காக ராமநாதபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக ராமநாதபுரம் சென்றிருந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று, அவரது வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட ரித்தீஷ் ஓய்வெடுத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 

இந்த நிலையில், இவரது மனைவி ஜோதீஸ்வரி (41) காரைக்குடியில் நகைத்தொழில் செய்து வரும் நகைப் பட்டறை உரிமையாளரான திருச்செல்வம் என்பவரிடம் கடந்த 2019-ம் ஆண்டு 60 லட்சம் ரூபாய்க்கு  தங்க நகைகள் வைரம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் வாங்கியுள்ளார்.

இதற்காக தலா 20 லட்சம் மதிப்பில் மூன்று காசோலைகளை திருச்செல்வத்திடம் அவர் கொடுத்துள்ளார். அந்த காசோலைகளை  வங்கியில் செலுத்தியபோது அதில் பணம் இல்லாதது தெரிய வந்தது. இது குறித்து  திருச்செல்வம் கேட்டபோது அதற்குப் பதிலாக பணம் தருவதாக ஜோதீஸ்வரி கூறியிருக்கிறார். ஆனால், பணம் தராமல் இழுத்தடித்திருக்கிறார்.

னவே, இது தொடர்பாக காரைக்குடி விரைவு நீதிமன்றத்தில் திருச்செல்வம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஜெயப்பிரதா, ஜோதீஸ்வரிக்கு 60 லட்சம் அபராதம் மற்றும் 6 மாத சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். இது காரைக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.