GOAT படத்தில் கேப்டன் விஜயகாந்த்.. ஏஐ தொழில்நுட்ப முயற்சிக்கு பிரேமலதா க்ரீன் சிக்னல்!

 

‘கோட்’ படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தை ஏஐ மூலம் திரையில் கொண்டு வர முடிவெடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு என பிரேமலதாவே உறுதிப்படுத்தியிருப்பது விஜய் ரசிகர்களை மட்டுமின்றி விஜயகாந்த் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விஜயின் 68வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. சென்னை, ராஜஸ்தான் மற்றும இஸ்தான்புல் ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு, கேரளாவில் நடைபெற்றது. தற்போது, இந்த படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 5-ம் தேதி ரிலீஸ் என அறிவித்த பின்பு படத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் புரோமோஷனும் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் பாடிய ‘கோட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்களான விசில் போடு பாடல் வெளியானது. வெளியான ஒரே நாளில் அதிரடியாக 30 மில்லியன் வியூஸ் அள்ளி மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. அரபி குத்து பாடலின் 24 மணி நேரம் சாதனையை இந்த பாடல் முறியடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

செந்தூரப் பாண்டி படத்தில் விஜய்யை அறிமுகப்படுத்திய விஜயகாந்த் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சுமார் 17 படங்களில் நடித்துள்ளார். கோட் படத்தில் ஏகப்பட்ட சர்ப்ரைஸ்களை கொண்டு வரும் முயற்சியில் வெங்கட் பிரபு இயங்கி வரும் நிலையில், மீண்டும் விஜயகாந்த்தை ஏஐ தொழில்நுட்பம் மூலமாக கோட் படத்தில் கொண்டு வரப் போவதாக பிரேமலதா விஜயகாந்த் சமீபத்தில் அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தி உள்ளார்.

வெங்கட் பிரபு இது குறித்து தன்னிடம் பேசியபோது விஜய் மற்றும் வெங்கட் பிரபுவுக்கு என்னால் நோ சொல்ல முடியாது. மேலும், கேப்டன் விஜயகாந்த் இடத்தில் இருந்துதான் நான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். சின்ன வயதிலிருந்து விஜய் மீது விஜயகாந்த்துக்கு ரொம்பவே பாசம் அதிகம். அவர் இருந்திருந்தால், நிச்சயம் தடை சொல்லி இருக்க மாட்டார். திருமணமாகி வந்ததிலிருந்து இளையராஜா மற்றும் கங்கை அமரன் குடும்பத்துடன் நெருங்கி பழகி வருகி்றேன்.

வெங்கட் பிரபுவை சிறுவயதிலிருந்தே தெரியும் விஜய்க்கும் வெங்கட் பிரபுவுக்கும் எப்போதுமே என்னால் நோ சொல்ல முடியாது. கேப்டனை ஒரு முக்கிய காட்சியில் ஏஐ மூலம் கொண்டு வர முயற்சித்து வருவதற்கு அனுமதி கேட்டனர். விஜய்யும் தேர்தல் முடிந்து வந்து என்னை சந்திப்பதாக கூறியுள்ளார் என பிரேமலதா சமீபத்திய பேட்டியில் கோட் படத்தில் விஜயகாந்தின் ஏஐ கேமியோ குறித்து ஓபனாக பேசியுள்ளார்.