29 வருட திருமண உறவை முறிக்கும் முன்பு மன கசப்பு.. ஏ.ஆர்.ரஹ்மான் கண்ணீருடன் பதிவு!
ஏ.ஆர்.ரகுமான் - சாய்ரா பானு இடையேயான 29 ஆண்டு கால திருமண வாழ்வு முறிவு அறிவிப்பு திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இசைப்புயல் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், சினிமாவில் பல சாதனைகளை படைத்துள்ளார். சையமைத்த முதல் படத்திலேயே தேசிய விருது, அதேபோல் கோல்டன் குளோப் விருது, ஆஸ்கர் விருதுகள் என உலகத்தின் புகழுடைய உச்சிக்கு சென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆனால் அவரது நடவடிக்கையும், பேச்சும் மிக மிக இயல்பாகவே இருக்கும். அதேபோல் எந்த ஈகோவும் காட்டாமல் பழகும் அவர் தனது மனதில் பட்டதை யார் மனதையும் புண்படுத்தாமல் சொல்லும் வித்தையை தெரிந்தவர் என்பதை அவர் பல முறை நிரூபித்திருக்கிறார்.
கடந்த வருடம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் சிம்பு நடித்த பத்து தல படம், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்கள், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு நடித்த மாமன்னன் படங்கள் கடந்த வருடம் வெளியாகின. படத்தில் அவரது இசையமைப்பில் உருவான அத்தனை பாடல்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. பின்னணி இசையும் உயர் தரத்தில் இருந்ததாக ரசிகர்கள் கூறினர். கடைசியாக அவரது இசையமைப்பில் அயலான், ஆடு ஜீவிதம், லால் சலாம், ராயன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின. குறிப்பாக ஆடுஜீவிதம் திரைப்படத்தில் பெரியோனே ரகுமானே பாடல் அவ்வளவு கொண்டாடப்பட்டது. அடுத்ததாக அவரது இசையில் தக் லைஃப் படம் வரவிருக்கிறது.
இதற்கிடையே அவர் சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இருவரும் 1995-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு அவ்வளவு காதலோடு தங்களது திருமண வாழ்க்கையை நகர்த்தி சென்றார்கள். அவர்களுக்கு கதிஜா என்ற மகளும், அமீன் என்ற மகனும் இருக்கிறார்கள். கதிஜாவும், அமீனும் இசை துறையில் தங்களது திறமையை நிரூபித்துவருகிறார்கள்.
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு ரஹ்மானிடமிருந்து பிரிவதாக அறிவித்திருக்கிறார். அவர் தரப்பிலிருந்து வெளியிட்டிருந்த அறிக்கையில், “திருமணமாகி பல வருடங்கள் கழித்து நான் ரஹ்மானை பிரிந்து செல்வது கடினமான முடிவுதான். இத்தனை வருடங்கள் வாழ்க்கையை நகர்த்திய பிறகு சமீபகாலமாக எங்களுக்குள் வலியும் கவலையும் அதிகமாகின. பதற்றங்கள் உருவாகி ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியிருக்கின்றன. அந்த இடைவெளியை நிரப்ப எங்களால் முடியவில்லை. மிக கடுமையான மன வலியில்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.