டிக்கெட் புக்கிங்கில் இத்தனை கோடியா..? ரிலீசாகும் முன்னே ஜெயிலரின் சாதனை!!

 

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ரிலீசுக்கு முன்னே உலக சாதனை படைத்துள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெயிலர்’. இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தில், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

ஜெயிலர் படத்தின் பாடல்கள், டிரெய்லர் ஆகியவை மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று பட்டையை கிளப்பியது. ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் இந்த படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். கடந்த ஜூலை 28-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஆகஸ்ட் 6ம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பாகி இன்னும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

டிக்கெட் முன்பதிவு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கிய நிலையில், முதல் 5 நாட்களுக்கான டிக்கெட்டுகள் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் தீர்ந்து விடும் நிலையில் உள்ளது. தொடர் விடுமுறை வருவதால் முன்பதிவு செய்யும் வேலையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு இணையதளமான BookMyShow இல் திங்கட்கிழமை வரை மொத்தம் 6,12,000 டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன.

திரைப்பட வர்த்தக ஆய்வாளரான மனோபாலா விஜயபாலன் கூறுகையில், சனிக்கிழமையன்று சுமார் 85.53 கே டிக்கெட்டுகளும், ஞாயிற்றுக்கிழமை 233.15 கே டிக்கெட்டுகளும், திங்கட்கிழமை சுமார் 293.33 கே டிக்கெட்டுகளும் விற்பனையாகி உள்ளதாக கூறி உள்ளார்.

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓப்பன்ஹெய்மர் மற்றும் கிரேட்டா கெர்விக்கின் பார்பி ஆகிய படங்களுக்குப் பிறகு சிங்கப்பூர் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஜெயிலரும் உள்ளது. வட அமெரிக்க சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் முதல் 5 தமிழ் திரைப்படங்களில் ஜெயிலரும் உள்ளது.

அமெரிக்காவில் திங்கட்கிழமை வரை பிரீமியர் அட்வான்ஸ் விற்பனையில் சுமார் 6,64,000 டாலர் மதிப்புள்ள டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன. இது விஜயின் பீஸ்டை விட அதிகமாகும். விஜய் மற்றும் பூஜா ஹெக்டே முக்கிய வேடங்களில் நடித்த பீஸ்ட் படத்திற்கு, சுமார் 6,58,000 டாலர் மதிப்புள்ள டிக்கெட்டுகள் விற்பனையாகி இருந்தன. மொத்தம் சுமார் ரூ 6.86 கோடி மதிப்பிலான ஜெயிலர் திரைப்படத்தின் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன.

இதன் மூலம், ரஜினிகாந்தின் கபாலி (ரூ.15.89 கோடி), மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் (ரூ.8.52 கோடி), ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய் குமார் நடித்த 2.0 (ரூ.8.12 கோடி) போன்ற படங்களின் வரிசையில் ஜெயிலரும் இணைந்துள்ளார். விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள பொன்னியின் செல்வன் 2 (ரூ. 6.09 கோடி). வெளிநாடுகளில் இதுவரை ரிலீசான அத்தனை படங்களின் சாதனைகளையும் ஜெயிலர் படத்தின் டிக்கெட் முன்பதிவு எண்ணிக்கை முறியடித்துள்ளது.

தமிழ்நாட்டில் ‘ஜெயிலர்’ படம் முதல் நாளில் தோராயமாக ரூ.25 கோடி வரை வசூல் செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் காலை 9 மணிக்குதான் முதல் காட்சி தொடங்குவதால் குறைந்தது வசூல் ரூ.17-18 கோடியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதேபோல் உலகளவில் இப்படம் முதல் நாளில் கிட்டதட்ட ரூ.50 கோடிக்கும் மேலாக வசூல் செய்யலாம் என உறுதியாக நம்பப்படுவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.