மீண்டும் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ்.. புதிய படத்தில் இணையும் சல்மான் கான்!

 

பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோவின் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாக அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

2001-ல் அஜித் நடிப்பில் வெளியான ‘தீனா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின்னர் விஜயகாந்த்தின் ரமணா. சூர்யாவின் கஜினி, 7ஆம் அறிவு, விஜய்யின் துப்பாக்கி, கத்தி, சர்கார், ரஜினியின் தர்பார் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். 

கஜினி படம் ஹிட்டானதை அடுத்து 2008-ம் ஆண்டு அவரின் திரையுலக பயணத்தை பாலிவுட் பக்கம் திருப்பினார். இவர் இயக்கிய கஜினி படத்தை அமீர்கானை வைத்து இந்தியில் ரீமேக் செய்தார். இந்த படம் ரூ.100 கோடி வசூலை தாண்டிய முதல் இந்தி படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ள ஏ.ஆர்.முருகதாஸ் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் பாலிவுட் படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் பாலிவுட்டில் தனது அடுத்த படத்தின் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இப்படத்தில் சல்மான் கான் கதாநாயகனாக நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தை சஜித் நாடியாட்வாலா தயாரிக்கிறார்.