‘காவாலா’ பாடலுக்கு AI சிம்ரன், காஜல் டான்ஸ்.. இணையத்தில் கலக்கும் வீடியோ!

 

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ‘காவாலயா’ பாட்டிற்கு பல்வேறு நடிகைள் ஆடும் ஸ்டைலுக்கு மாற்றி அமைத்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.

‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. இந்தப் படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். இந்தப் படத்தில், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முத்துவேல் பாண்டியன் என்ற வேடத்தில் ரஜினி நடித்து வருகிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்தப் படம், வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


இந்த நிலையில், ஜெயிலர் படத்தின் முதல் பாடல் கடந்த 6-ம் தேதி வெளியானது. அனிருத் இசையில் அருண் ராஜா காமராஜ் எழுதியுள்ள காவாலா என்ற பாடல் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த பாடல் குறித்து விமர்சனங்கள் அதிகம் இருந்தாலும் அதே அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவும் தவறவில்லை.

மேலும் இந்த பாடலில் கேமியோவில் ரஜினிகாந்த் தோன்றியுள்ள நிலையில், தமன்னா பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த பாடல் மற்றும் தமன்னாவின் நடனம் இணையத்தில் வைப் ஆகி வரும் நிலையில், இந்த பாடல் குழந்தைகள் மத்தியிலும் வரவேற்பை பெற்று வருகிறது.


இந்நிலையில் செந்தில் நாயகம் என்ற செயற்கை நுண்ணறிவு என்ஜினியர் தமன்னா பாட்டியாவின் நடனத்தை பல்வேறு நடிகைகளும் ஆடும் ஸ்டைலுக்கு மாற்றி அமைத்து வீடியோ வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது செந்தில் நாயகத்தின் ட்விட்டர் பக்கத்தில், சிம்ரன், ஹன்சிகா, நயன்தாரா, மாளவிகா, கத்ரீனா கைப், கெய்ரா அத்வானி, மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் ஆடும் ரீல்ஸ் வீடியோ காணப்படுகின்றன.