11 வருட மணவாழ்க்கை முடிந்தது.. ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து அறிவிப்பு
பிரபல நடிகரும, இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார், தனது மனைவி சைந்தவியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
1993-ல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில் வெளியான ‘ஜென்டில்மேன்’ படத்தில் பாடகராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ் குமார். ரஹ்மானின் பல படங்களில் பணியாற்றி வந்த இவர், 2006-ம் ஆண்டு வெளியான ‘வெயில்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, கிரீடம், பொல்லாதவன், ஆயிரத்தில் ஒருவன், மதராசபட்டினம், ஆடுகளம், அசுரன், சூரரைப் போற்று உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இதனிடையே, 2015-ல் வெளியான ‘டார்லிங்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பின், த்ரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில், நாச்சியார், சிவப்பு மஞ்சள் பச்சை, ஜெயில், ரெபல், கள்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதனிடையே 2013-ம் ஆண்டு தனது பள்ளி பருவ காதலியான பாடகி சைந்தவியை ஜி.வி.பிரகாஷ் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் அன்வி எனகிற பெண் குழந்தை உள்ளது.
இந்த சூழலில் ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பான தனது எக்ஸ் வலைதளத்தில், "நீண்ட யோசனைக்குப் பிறகு, சைந்தவியும் நானும் திருமணமாகி 11 வருடங்கள் கழித்து, ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையைக் காத்துக்கொண்டு, எங்கள் மன அமைதிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் பிரிந்து செல்ல முடிவு செய்தோம்.