நடிகை வரலட்சுமிக்கு தாய்லாந்தில் திருமணம்.. சென்னையில் ரிசப்ஷன்!

 

நடிகை வரலட்சுமி தனது திருமணத்தை தாய்லாந்திலும் ரிசப்ஷனை சென்னையிலும் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2012-ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. இப்படத்தில் இவரின் துறுதுறுவான நடிப்பால் இளைஞர்களை கவர்ந்தார். பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரைதப்பட்டை’ படம் இவருக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல அடையாளத்தை தந்தது.

அதனைத் தொடர்ந்து விக்ரம் வேதா, மாரி-2, கன்னிராசி, பாம்பன், நீயா-2, எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம், மிஸ்டர் சந்திரமௌலி, சண்டக்கோழி-2, சர்க்கார் உள்ளிட்ட படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடைசியாக தெலுங்கில் வெளியான ‘ஹனுமான்’ படத்தில் நடித்திருந்தார். அடுத்து தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராயன்’ படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில்,  மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிகோலய் என்பவருக்கும் வரலட்சுமிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்தார் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. மும்பையில் புது வீடு, வருங்கால கணவருடன் வெகேஷன் என கொண்டாட்டத்தில் இருந்த வரலட்சுமிக்கு வருகிற ஜூலை மாதம் திருமணம் செய்தி இணையத்தில் வலம் வருகிறது.

சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தடபுடலாக மெஹந்தி ஃபங்ஷனும் ரிசப்ஷனும் வைக்கத் திட்டமிட்டுள்ளனர். இதில் திரையுலகினர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். திருமணத்தை பாலிவுட் ஸ்டைலில் தாய்லாந்தில் குடும்ப உறுப்பினர்களோடு நடத்தத் திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த ஏற்பாடுகளுக்காக சமீபத்தில், வரலட்சுமியும் நிகோலயும் தாய்லாந்து சென்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

43 வயதாகும் நிகோலய் சத்தேவுக்கு ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானது குறிப்பிடத்தக்கது. இவருக்கு 15 வயதில் ஒரு மகளும் உள்ளார். இந்த செய்தி தெரிய வந்ததும் பலரும் ‘வரலட்சுமி இரண்டாவது மனைவியா? இப்படியான திருமணம் தேவையா?’ என்ற ரீதியில் கமெண்ட் செய்ய ஆரம்பித்தனர். இதற்கெல்லாம் மறைமுக பதிலடியாக வரலட்சுமி, ‘என் வாழ்க்கையில் எனக்கு சந்தோஷம் தரும் முடிவுகளைத்தான் எடுப்பேன். யாருக்காகவும் அதை மாற்றிக் கொள்ள மாட்டேன். எல்லாப் பெண்களும் அப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று பதிவிட்டார்.