நடிகை சமந்தாவிற்கு சிறந்த பெண்மணி விருது.. சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி அறிவிப்பு

 

நடிகை சமந்தாவிற்கு இந்திய சினிமாவின் மதிப்புமிக்க ‘ஆண்டிற்கான சிறந்த பெண்’ என்ற விருது வழங்கப்பட  உள்ளது.

2010-ல் வெளியான ‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. அதனைத் தொடர்ந்து, மாஸ்கோவின் காவிரி, நடுநசி நாய்கள், நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை சமந்தா 10 ஆண்டுகளை கடந்து தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார்.

இவருக்கும் தெலுங்கு பட உலகத்தின் முக்கிய நட்சத்திரமாக கருதப்படும் நாகார்ஜுனாவின் மகன் நாக சைத்தானியாவிற்கும் 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் நடிப்பதை தொடர்ந்த சமந்தா, புஷ்பா படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்லறீயா மாமா’ பாடலில் ஒட்டுமொத்த க்ளாமரையும் இறக்கி ரசிகர்களை கிறங்கடிக்க வைத்தார். சுமூகமாக சென்ற இந்த காதல் ஜோடியின் வாழ்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சமந்தா நாக சைதன்யா 2022-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

இந்த நிலையில், சர்வதேச இந்திய திரைப்பட அகாடமியின் சார்பில் அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் வருகிற 27-ம் தேதி விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. அதில் நடிகை சமந்தாவிற்கு இந்திய சினிமாவின் மதிப்புமிக்க ‘ஆண்டிற்கான சிறந்த பெண்’ என்ற விருது வழங்கப்பட  உள்ளது.

இந்த விழாவில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, ராம் சரண் மற்றும் பாலகிருஷ்ணா உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கௌரவ விருதை வழங்குவதற்காக நடிகை சமந்தா நன்றி தெரிவித்துள்ளார். ஒரு கலைஞராகவும், ஒரு பெண்ணாகவும் இந்த விருதை பெறுவது பெருமையாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.