அரசியலில் களமிறங்கும் நடிகை சமந்தா? வைரலாகும் தகவல்!

 

நடிகை சமந்தா தற்போது நடிப்புக்கு பிரேக் எடுத்துள்ள நிலையில் அது முடிந்ததும் அரசியலில் ஈடுபட உள்ளார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

2010-ல் வெளியான ‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. அதனைத் தொடர்ந்து, மாஸ்கோவின் காவிரி, நடுநசி நாய்கள், நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை சமந்தா 10 ஆண்டுகளை கடந்து தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார்.

இவருக்கும் தெலுங்கு பட உலகத்தின் முக்கிய நட்சத்திரமாக கருதப்படும் நாகார்ஜுனாவின் மகன் நாக சைத்தானியாவிற்கும் 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் நடிப்பதை தொடர்ந்த சமந்தா, புஷ்பா படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்லறீயா மாமா’ பாடலில் ஒட்டுமொத்த க்ளாமரையும் இறக்கி ரசிகர்களை கிறங்கடிக்க வைத்தார். சுமூகமாக சென்ற இந்த காதல் ஜோடியின் வாழ்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சமந்தா நாக சைதன்யா 2022-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

இதனை தொடர்ந்து அந்த ஆண்டு மிகவும் கடினமான ஆண்டாகவே சமந்தாவிற்கு அமைந்தது. ஜிம் ஒர்கவுட்டில் மரண மாஸ் காட்ட தொடங்கிய சமந்தா மயோசிட்டிஸ் என்ற தசை நோயால் பாதிக்கப்பட்டார். சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளால் அவர் மனதளவிலும் சோர்ந்திருந்த நிலையில், நடித்து வந்த ‘குஷி’ உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அவர் குணமடைந்த பின், இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. அதில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து மீண்டும் நடித்தார் சமந்தா.

குஷி படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்த சமயத்தில் நடிப்பதில் இருந்து ஒரு வருடம் சமந்தா பிரேக் எடுக்கப் போவதாக அறிவிப்பை வெளியிட்டார். ஒரு வருடம் சினிமாவை விட்டு விலகி, அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக புதிய படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகவில்லை. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் குஷி படம் வெளியானது. படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

தற்போது நடிகை சமந்தா அரசியலில் ஈடுபடப்போவதாக தகவல் பரவி உள்ளது. ஏற்கனவே பிரதியுஷா என்ற அமைப்பை தொடங்கி ஏழைகளுக்கு உதவிகள் செய்து சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தெலுங்கானாவில் உள்ள விவசாயிகளுக்கு ஆதரவாகவும் செயல்படுகிறார். கைத்தறி நெசவாளர்களால் தயாரிக்கப்பட்ட துணிகளின் விளம்பர தூதராகவும் அரசு இவரை நியமித்து உள்ளது. 

இதையடுத்து தெலுங்கானாவில் கே.சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்டிர சமிதி கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட முடிவு செய்து இருப்பதாக தெலுங்கு இணைய தளங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. இது சம்பந்தமாக அந்த கட்சியின் நிர்வாகிகள் சமந்தாவை தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.