காதலர் ஜாக்கி பக்னானியை கரம் பிடித்தார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.. வைரலாகும் புகைப்படங்கள்!

 

பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது காதலரை நேற்று திருமணம் செய்து கொண்ட நிலையில் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

2009-ல் வெளியான ‘கில்லி’ படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். தொடர்ந்து 2011-ல் வெளியான ‘யுவன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தடையரா தாக்க, என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே, பூ, அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்த அவர் இந்தியிலும் தடம் பதித்து உள்ளார்.  நடிகர்கள் அமிதாப் பச்சன், அஜய் தேவ்கன் உள்ளிட்டோருடன் சேர்ந்து நடித்துள்ளார்.  துருதுருவென்ற நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த நடிகை ரகுல் ப்ரீத் சிங்குக்கு ஜாக்கி பாக்னானி என்ற காதலர் இருக்கிறார்.

ரகுல் ப்ரீத் மற்றும் ஜாக்கி பாக்னானி இருவரும் 2020-ம் ஆண்டு முதல் காதல் ஜோடிகளாக உலா வருகின்றனர். பல இடங்களுக்கும் ஒன்றாக சென்று வந்தனர். 2021-ம் ஆண்டிலேயே இந்த ஜோடி தங்களுக்கு இடையேயான உறவை உறுதி செய்தது. அதன்பின் தங்களுக்கு இடையேயான இனிமையான தருணங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தது. பொதுவெளியிலும் அவர்கள் ஒன்றாக தோன்றினர்.

ராணுவ குடும்ப பின்னணியில் இருந்து வந்த அவர், உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்.  இதற்காக, ரகுல் தனியாக 3 உடற்பயிற்சி கூடங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர்கள் இருவரும் திருமணம் செய்வது பற்றி நீண்ட நாட்களாக ரகுல் ப்ரீத் எதுவும் கூறாமல் இருந்த நிலையில், சமூக வலைதளத்தில் அதுகுறித்து அழைப்பிதழ் புகைப்படங்கள் வைரலாகின.

நடிகர்கள் அர்ஜுன் கபூர், வருண் தவான் மற்றும் நடிகைகள் ஷில்பா ஷெட்டி, ஈஷா தியோல் உள்ளிட்டோர் இந்த தம்பதியின் புதிய பயணத்திற்கு தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். ரசிகர்களும் திருமணத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நேற்று மாலை இருவருக்கும் இந்து முறைப்படியும் திருமணம் நடைபெற்றது. ரகுல் ப்ரீத் சிங்கின் திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.