மருத்துவமனையில் நடிகை அமலாபால்.. ரசிகர்கள் வாழ்த்து!

 

நடிகை அமலாபாலுக்கு இன்னும் சில தினங்களில் குழந்தைப் பிறக்க உள்ள நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2009-ல் வெளியான ‘நீலதாமரா’ படத்தின் மூலம் மலையாள சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை அமலா பால். அதனைத் தொடர்ந்து, 2010-ல் வெளியான ‘வீரசேகரன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் சிந்து சமவெளி, மைனா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மைனா படத்தில் மலைவாழ் கிராமத்தில் வாழும் அழகிய பெண்ணாக இவர் வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து தெய்வத்திருமகள், தலைவா படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

தெய்வத்திருமகள் படத்தின் படப்பிடிப்பின் போது ஏ.எல்.விஜய் மற்றும் அமலாபால் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. பின்னர் 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு மனமுவந்து பிரிவதாக இருவரும் அறிவித்து பிரிந்து விட்டனர். மலையாளம், தெலுங்கு, தமிழ் என நடித்துவரும் அமலாபால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி அமலா பாலின் பிறந்தநாள் அன்று தன்னுடைய காதலன் ஜெகத் தேசாய் புரோபோஸ் செய்த, புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட அவை படு வைரலானது. மேலும் தன்னுடைய காதலன் புரோபோஸ் செய்த ஒரே வாரத்தில் அமலா பால், ஜெகத் தேசாய் ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.

அமலா பால் ஜெகத் தேசாய் ஜோடிக்கு திருமணமான இரண்டே மாதத்தில் அமலா பால் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூலம் அறிவித்தார். தற்போது 9-வது மாதத்தை எட்டியிருக்கும் அமலா பால் தன் முதல் குழந்தையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார். இன்னும் சில தினங்களில் குழந்தைப் பிறக்க இருக்கும் நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

‘லேபர்ஹூட்டில் இன்று அழகான நாள்’ என்ற வாசகம் பொறித்திருக்கும் டீஷர்ட் அணிந்து, மருத்துவமனை அறையில் அமலாபால் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை அவரது கணவர் ஜெகத் பகிர்ந்துள்ளார். அமலாவும் இதை ரீஷேர் செய்து மகிழ்ந்திருக்கிறார். ‘நல்லபடியாக குழந்தைப் பிறக்க வேண்டும்’ என அவரது ரசிகர்கள் அமலாவுக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.