பிரபல நடிகரின் மனைவி திடீர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகரகள்!

 

கன்னட நடிகர் விஜயராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 41.

கன்னட திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் விஜய ராகவேந்திரா. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். இவரது மனைவி ஸ்பந்தனா. இவர்கள் இருவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு சௌர்யா என்ற மகன் உள்ளார்.

2016-ம் ஆண்டு வி. ரவிச்சந்திரன் இயக்கிய ‘அபூர்வா’ என்ற கன்னட திரைப்படத்தில் விஜய் ராகவேந்திராவின் மனைவியாக சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். மேலும் விஜய் ராகவேந்திரா நடித்து இயக்கிய ‘கிஸ்மத்’ படத்தை ஸ்பந்தனா தயாரித்தார். இவர், தனது உறவினர்களுடன் கடந்த வாரம் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றிருந்திருக்கிறார். நடிகர் விஜய் ராகவனும் சமீபத்தில் அவர்களுடன் இணைந்து இருக்கின்றனர்.

சுற்றுலா சென்ற இடத்தில் ஸ்பந்தனாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுற்றுலா போன இடத்தில் விஜய ராகவேந்திராவின் மனைவி மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் கன்னட திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அவரது உடலை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 8) பெங்களூரு கொண்டு வர இறுதி சடங்குகள் நடைபெறவுள்ளன. ஸ்பந்தனாவின் தந்தை பி.கே.சிவராமும், சகோதரர் ரக்ஷித் சிவராவும் ஏற்கனவே பாங்காக் சென்றுவிட்டனர். விஜய ராகவேந்திரா - ஸ்பந்தனா ஜோடி தங்களது 16வது திருமண நாளை கொண்டாட இன்னும் 19 நாட்களே இருந்த நிலையில் இப்படி ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மனைவியை இழந்து வாடும் நடிகர் விஜய ராகவேந்திராவுக்கு, அந்த வலியை தாங்கும் சக்தியை இறைவன் கொடுக்க வேண்டும் என திரையுலகினர் மட்டுமின்றி அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆறுதல் கூறியும், பிரார்த்தனை செய்தும் வருகின்றனர். அவரது மறைவுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டிகே சிவகுமார் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.