மாணவர்களை சந்திக்கும் நடிகர் விஜய்.. இந்த பொருட்களை உள்ளே எடுத்து செல்ல தடை..!

 

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களை நடிகர் விஜய் இன்று சந்திக்கிறார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டுள்ளார். இவர், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தொடர்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஏழை எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு விஜய்யின் அரசியல் நகர்வாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டி, கல்வி உதவித்தொகைய நடிகர் விஜய் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற தலா மூன்று மாணவர்கள் வீதம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியருக்கு பரிசு, கல்வி உதவித் தொகை நடிகர் விஜய் வழங்க உள்ளார்.

சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் இன்று இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காலை 9 மணிக்கு மேலாக தொடங்க உள்ள இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் அவர்களது பெற்றோர்கள் உள்ளிட்டோர் அந்தந்த தொகுதிகளை சார்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சார்பில் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

காலை 6 மணி முதல் ஒவ்வொரு ஊரிலிருந்தும் தொகுதி சார்பில் வாகனங்கள் மூலம் மாணவர்களும் பெற்றோர்களும் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே நிகழ்வில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகளுக்கும், பெற்றோர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்துள்ள மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் என 5 ஆயிரம் பேருக்கும் காலை உணவு மற்றும் மதிய உணவாக பிரியாணியும் வழங்கப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்காக பொது வெளியில் பேனர், கட் அவுட்டுகள் வைக்கக் கூடாது என ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு ஏற்கனவே நடிகர் விஜய் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது, அது போல் பெரிய பேனர்கள் எதுவும் வைக்கப்படவில்லை, சில இடங்களில் போஸ்டர்கள் மட்டும் ஒட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்துள்ள மாணவ மாணவிகளிடம் இருந்த ஸ்மார்ட் வாட்ச், செல்போன் அகியவை அரங்கத்தின் உள்ளே கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்துள்ள மாணவ மாணவிகள் பேசும் போது, பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் தாங்கள் எடுத்த மதிப்பெண்கள் மூலம் தான் இது போன்ற சுலபத்தில் நேரில் சந்திக்க முடியாதவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதாகத் தெரிவித்தனர். நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர்கள் நாங்கள் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதை நினைக்கும் போது அளவு கடந்த மகிழ்ச்சியாக உள்ளது என்றும் பேசினர்.