பிரபல நடிகர் நாசரின் தந்தை மரணம்.. திரையுலகினர் இரங்கல்!

 

பிரபல நடிகர் நாசரின் தந்தை மெஹபூப் பாஷா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 95.

1985-ல் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ‘கல்யாண அகதிகள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நாசர். தொடர்ந்து புதிய பூக்கள், வேலைக்காரன், நாயகன், தர்மத்தின் தலைவன், சத்யா, பறவைகள் பலவிதம், தேவர் மகன், இந்திரா, அவ்வை சண்முகி, காதலர் தினம், அமர்க்களம், வசீகரா, அன்பே சிவம், விருமாண்டி, பாகுபலி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதுதவிர, அவதாரம், தேவதை, மாயன், பாப் கார்ன், சன் சன் தாத்தா ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர், நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட இவர், நடிகர் சங்க தலைவராகவும் உள்ளார்.

இந்த நிலையில் நடிகர் நாசரின் தந்தை காலமானார். செங்கல்பட்டு தட்டான்மலை தெருவைச் சேர்ந்த நடிகர் நாசரின் தந்தை  மெஹபூப் பாஷா உடல் நலக்குறைவு காரணமாக தனது வீட்டில் உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாசர் திரையுலகில் ஜொலிப்பதற்கு அவரது தந்தையும் ஒரு காரணமாவார். தன் தந்தையின் ஆசைக்காக நடிப்பு பயிற்சி கல்லூரியில் சேர்ந்த நாசர் அதன்பின், நடிப்புப் பயிற்சி முடித்துவிட்டு, பெரியளவில் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் தாஜ் ஓட்டல் ஒன்றில் சப்ளையராக வேலைக்குச் சென்றார். பின்னர் மீண்டும் அவரின் தந்தை கட்டாயத்தின் பேரில் வாய்ப்புகளை தேடி அலைந்து மிகப்பெரும் நடிகராக உள்ளார்.