நடிகர் மனோபாலாவின் கடைசி வீடியோ.. 24 மணி நேரத்திற்குள் உயிர் பிரிந்த துயர சம்பவம்...!
நடிகர் மனோபாலா தனது யூடியூப் சேனிலில் நேற்று வெளியிட்ட வீடியோவின் கமென்ட் பகுதியில் ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1982-ல் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ஆகாய கங்கை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் மனோபாலா. அதனைத் தொடர்ந்து பிள்ளைநிலா, ஊர்க்காவலன், என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். மேலும், 1994-ல் வெளியான ‘தாய்மாமன்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து தோழர் பாண்டியன், நந்தினி, நட்புக்காக, தலைமுறை, தாஜ்மகால், மின்சார கண்ணா உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி சில படங்களை இவர் தயாரித்துள்ளார். சமீபத்தில் கூட சிரஞ்சீவியின் ’வால்டர் வீரய்யா’ திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திரைப்படங்களில் மட்டுமின்றி தொலைக்காட்சி சீரியல்களிலும் அவர் நடித்திருந்தார் என்பதும் குறிப்பாக குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் அவர் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக உடல் நலகுறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மனோபாலா இன்று காலமானார்.
முன்னதாக நேற்று அவரது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவரும் கோவை சரளாவும் பழம்பெரும் நடிகை மனோரமா குறித்து பேசுகின்றனர். 3 நிமிடம் 13 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில் கலகலப்பாக பேசும் மனோபாலா திரைத்துறை நினைவுகளை பகிர்கிறார். இந்த வீடியோவின் கமெண்ட் பகுதியில் ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.