மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகர் ஜான் விஜய்.. ஆதாரங்களை வெளியிட்ட சின்மயி!
பிரபல நடிகர் ஜான் விஜய் பெண்களிடம் அத்துமீறுவதாக பிரபல பாடகி சின்மயி புகார் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரைப்படங்களில் வில்லனாக, குணச்சித்திர நடிகராக நடித்து வருபவர் நடிகர் ஜான் விஜய். இவர், 2006-ல் வெளியான ‘தலைமகன்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தைதொடர்ந்து ‘ஓரம் போ’ படத்தில் பிச்சை என்னும் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். இவருடைய முகத்திற்கு வில்லன் கதாபாத்திரம் செட்டானாலும், ஒரு சில படத்தில் காமெடியனாக நடித்து ஸ்கோர் செய்திருப்பார். மெளன குரு படத்தில் அடாவடி போலீசாக நடித்திருந்த ஜான் விஜய், கலகலப்பு படத்தில் சிரிப்பு போலீசாக வந்து ரசிகர்களை சிரிக்க வைத்தார்.
ராவணன், அங்காடி தெரு, பலே பாண்டியா, தில்லாலங்கடி, வா, கோ, ஆண்மை தவறேல், வந்தான் வென்றான், சமர், டேவிட், நேரம், தீயா வேலை செய்யணும் குமாரு, பட்டத்து யானை, ஐந்து ஐந்து ஐந்து, வாயை மூடிப் பேசவும், திருடன்போலீஸ், வெள்ளைக்கார துரை, எனக்குள் ஒருவன், கோ2, கபாலி, சார்பட்டா பரம்பரை, பிச்சைக்காரன் 2 உள்ளிட்ட பல தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ள ஜான் விஜய், தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், மலையாள பெண் பத்திரிகையாளர் ஒருவர், ஜான் விஜய்யுடனான நேர்காணலுக்காக காத்திருந்தபோது அவர் தன்னிடம் தகாத முறையில் நடந்தக்கொண்டதாக குற்றம்சாட்டி உள்ளார். மேலும், அவர் எப்போதுமே சென்னையில் உள்ள கிளப் மற்றும் பப்களுக்கு செல்வார். அங்கு வரும் பெண்களை அவர் தவறாக அணுகுவார். அவர்கள் நோ சொன்னாலும் அவர்கள் செல்லும் இடங்களுக்கெல்லாம் செல்வார். அவர் பிரபலமாக இருப்பதால், பெண்கள் அவருக்கு ஒத்துழைக்க வேண்டும் என நினைக்கிறார். அவரின் இந்த அணுகுமுறை அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும், அவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து கொண்டே இருப்பார் என்று அந்த பெண் பத்திரிக்கையாளர் கூறியிருந்தார்.