விஜய்யின் ‘லியோ’ படத்தில் நடிகர் தனுஷ்? 15 நாட்கள் கால்ஷீட் அளித்திருப்பதாக தகவல்!

 

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் தனுஷ் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

‘வாரிசு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை த்ரிஷா, நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஸ்கின், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

லியோ படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியானதிலிருந்து படத்தின் கதை என்னவாக இருக்கும் என ரசிகர்கள் தங்களது யூகங்களை வெளியிட்டு வருகின்றனர். லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக 14 வருடங்களுக்கு பிறகு திரிஷா நடிக்கிறார். இதில் ஹைலைட் என்னவென்றால் விஜய்க்கு மட்டுமல்ல, திரிஷாவுக்கும் இது 67வது படமாம்.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரைத் தொடர்ந்து சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்தப் படத்தின் முக்கிய சண்டைக்காட்சி ஒன்று தற்போது படமாக்கப்பட்டு வருகிறதாம். இந்தப் படப்பிடிப்பில் நடிகர் சஞ்சய் தத் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் டீசர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜுன் 22-ம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விக்ரம் படத்தில் ரோலேக்ஸ் என்ற வேடத்தில் சூர்யா நடித்ததுபோல, இந்தப் படத்தில் சிறப்பு வேடத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறாராம். ரோலெக்ஸ் அளவுக்கு அழுத்தமான வேடத்தில் தனுஷ் இந்தப் படத்தில் நடிக்கவிருப்பதாகவும் இதற்காக 15 நாட்கள் கால்ஷீட் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.