பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி திடீர் மரணம்.. திரையுலகில் தொடரும் சோகம்!

 

பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 48.

2000-ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சித்தி’ தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் டேனியல் பாலாஜி. அதனைத் தொடர்ந்து ‘அலைகள்’ தொடரிலும் நடித்தார். இந்த 2 தொடர்களும் அவருக்கு மக்களிடையே நல்ல அடையாளம் கொடுத்தது. அதன்பின், 2002-ல் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ‘ஏப்ரல் மாத்தில்’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

தொடக்கத்தில் சிறு சிறு பாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘காக்க காக்க’ படத்தில் ஸ்ரீகாந்த் என்ற போலீஸ் பாத்திரத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார். பின்னர் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் வில்லனாக நடித்து அதீத கவனம் ஈர்த்தார்.

தொடர்ந்து பொல்லாதவன் (ரவி), வை ராஜா வை, அச்சம் என்பது மடமையடா, பைரவா, வட சென்னை, பிகில் போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார். பெரும்பாலும் வில்லன் நடிகராக நடிப்பார். அதற்கு அவரது குரல், மேனரிசம், உடல் மொழியும் பொருத்தமாக இருக்கும்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் இருந்த அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி காலமானர்.

டேனியல் பாலாஜியின் மறைவு திரையுலகினரின் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டேனியல் பாலாஜியின் மறைவுக்கு சமூக வலைத்தளங்களிலும் அவரது ரசிகர்கல் ஆழ்ந்த இரங்கல்களை பதிவிட்டு வருகின்றனர்.