சண்டை காட்சியில் விபத்து.. நடிகருக்கு கால் எலும்பு முறிவு.. தக் லைஃப் ஷூட்டிங் ஸ்பாட்டில் விபரீதம்!

 

தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நிகழ்ந்த விபத்தில் பிரபல நடிகருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம் படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் ‘தக் லைஃப்’ படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கி வருகிறார். இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். நாயகன் படத்தை தொடர்ந்து அவர்கள் இருவரும் மீண்டும் இணைவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, விருமாண்டி அபிராமி உள்ளிட்டோர் நடிக்க கமிட்டாகி இருக்கின்றனர். ஏற்கனவே மன்மதன் அன்பு, தூங்கா வனம் ஆகிய படங்களில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார் திரிஷா. இதனையடுத்து தற்போது 3வது முறையாக கமலுடன் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் தொடங்கி செர்பியாவில் விறுவிறுப்பாக நடந்தது. இதனையடுத்து மக்களவைத் தேர்தல் நிறுத்தப்பட்டிருந்த ஷூட்டிங் இப்போது மீண்டும் தொடங்கியிருக்கிறது.

இதற்கிடையே படத்தில் கமிட்டாகியிருந்த துல்கர் சல்மான், ஜெயம் ரவி உள்ளிட்டோர் படத்திலிருந்து வெளியேறிவிட்டார்கள். அதேசமயம் சிம்பு இந்தப் படத்தின் இணைந்தார். அவர் தொடர்பான கேரக்டர் இண்ட்ரோ வீடியோ அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் சிம்பு பல காட்சிகளை சிங்கிள் டேக்கிலேயே முடித்துவிடுவதாகவும் கூறப்படுகிறது.

இப்போது தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்துவருவதாகவும், முக்கியமான சண்டை காட்சி ஒன்று படமாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த சண்டை காட்சியில் ஜோஜு ஜார்ஜ் கலந்துகொண்டார் என்றும்; அப்போது ஏற்பட்ட விபத்தில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு எலும்பு முறிந்துவிட்டது என்று தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.